வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:41 (01/03/2018)

''கர்ப்பிணிகள்... சீரியல் பார்க்கலாமா?" மன நல மருத்துவரின் அறிவுரை

வேலைக்குப் போகும் பெண்களோ, இல்லத்தரசியோ தங்கள் ஓய்வு நேரத்தில் அதிகம் தேர்ந்தெடுக்கும் ஒரு விஷயம், சேனல் சீரியல்கள். பிரிக்கவே முடியாதது பெண்களும் சீரியல்களும் என்றாகி விட்டது. சீரியல்கள் டைம் கில்லர் என்ற நெகடிவ் கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், அதன்மூலம் பல நல்ல விஷயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அக்கம்பக்கத்து வீடுகளில் ஒன்றுகூடி அரட்டை என்கிற பெயரில் ஊர் வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதில், இது எவ்வளவோ மேல் என்பது ஒன்று. சீரியல் பார்க்கும் ஆவலில் வீட்டில் உள்ளோருக்கு உணவு பரிமாறவும் மறப்பது, விருந்தினர்களைச் சரியாக உபசரிக்காமல் விடுவது போன்றவை சம்பந்தப்பட்ட பெண்களின் தனிப்பட்ட குணத்தைப் பொறுத்தது. இந்த நிலையில் கர்ப்பிணிகள் சீரியல் பார்ப்பது நல்லதல்ல என்ற கருத்து ஒன்றும் சமீப காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை? குழந்தைப் பேற்றுக்குப் பிறகு பெண்களுக்கு வருகிற மன அழுத்தம் குறித்து  உளவியல் நிபுணர், சிவலிங்கம் ஆலோசனை சொல்கிறார்... 

கர்ப்பிணி

''மருத்துவர்களால் பெட் ரெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களைத் தவிர, மற்ற கர்ப்பிணிகள் ஒரே இடத்தில் அமர்ந்து சீரியல்களைப் பார்ப்பதைவிட, முடிந்த உடலுழைப்பைச் செய்தவாறு இருப்பதுதான் சுகப்பிரசவத்துக்கு நல்லது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதன்மூலம், இந்தக் கால வாழ்க்கை மாற்றத்தினால் பல பெண்களுக்கும்  கர்ப்பமாக இருக்கும்போது வருகிற நீரிழிவைத் தடுக்க முடியும். இன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்கள்கூட கர்ப்பக்காலத்தில் ஒர்க் அட் ஹோம் பெற்று வீட்டிலேயே வேலை பார்க்கிறார்கள். அவர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்யாமல் இடையிடையே உடலுழைப்பில் ஈடுபடுவதே அவர்களுக்கும் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் நல்லது. ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. இந்நிலையில், அப்படி அமர்ந்து சீரியல் பார்ப்பதனால் வருகிற பிரச்னைகளை நினைத்துப் பாருங்கள். 

உளவியல் நிபுணர் இது மன ரீதியாக எப்படிப் பாதிக்கும் என்பது, அவர்கள் தேர்ந்தெடுக்கும் சீரியல்களைப் பொறுத்தது. ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும்; நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்; இதமான இசையைக் கேட்க வேண்டும் என்று முன்னோர்கள் எதற்காகச் சொல்லி இருக்கிறார்கள்? நல்லனவற்றைச் செய்ய செய்ய, அவை கருவுக்கும் சேர்ந்து செல்லும். இதே கான்செப்ட்தான் சீரியல் பார்ப்பதிலும். பயம், சோகம், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் சீரியல்கள், நிச்சயம் கருவுக்கு நல்லதல்ல என்பதுதான் மருத்துவ அனுபவம். காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்துவிட்டு வேலைக்குச் செல்வது, திரும்பி வந்ததும் மறுபடியும் வீட்டு வேலைகள், சிலர் முதல் குழந்தையையும் சேர்த்துப் பராமரிப்பது எனக் கருத்தரித்த காலத்திலும் இன்றையப் பெண்கள், ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பதில் மனதளவில் சோர்ந்துள்ளார்கள். இந்நிலையில், உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்யும் சீரியல்கள், மேலும் மனதைப் பாதிக்கவே செய்யும். எனவே, டான்ஸ், பாட்டு மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். 

கர்ப்பிணி

சமீபத்திய ஆய்வு ஒன்று, உடலுழைப்பு இல்லாத காரணத்தாலும், உணர்வுகளைக் கொந்தளிக்கவைக்கும் விஷயங்களைத் தொடர்ந்து பார்த்து வருவதாலும் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி குறைபடுகிறது என்கிறது.ஆக.  கருத்தரித்த பெண்கள் நெகட்டிவ் உணர்வுகளை அதிகம் ஏற்படுத்தும் சீரியல்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது'' என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்