”கருணாநிதிக்குக் கைவந்தது ஸ்டாலினுக்குச் சாத்தியமாகுமா?” #HBDStalin

ஸ்டாலின்

“ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது” எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் வைரவிழா நிகழ்வின்போது தெரிவித்திருந்தார். “ராகுல் காந்தியின் கூற்றைப்போலவே தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அப்படியான ஒரு பொறுப்பு மிகவும் கடுமையாகத்தான் இருக்கிறது” என்கின்றனர் தி.மு.க. நிர்வாகிகள்.

அன்று... தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்துக்கு எதிராகத் தி.மு.க. களம் கண்டது. அதில், வெற்றியும் பெற்றது. எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி தொடங்கியதும் அவரின் அ.தி.மு.க., தி.மு.க-வை எதிர்த்து வளர்ந்தது. காங்கிரஸுக்குப் பிறகு தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில்தான், தற்போது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் இனியும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஜெயலலிதா மரணமும், கருணாநிதியின் உடல்நலக்குறைவுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், தமிழக அரசியல் களத்தில் எண்ணற்ற மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதிலும், குறிப்பாக அ.தி.மு.க-வினரின் களேபரங்களுடன் கூடிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இந்த அரசியல் களேபரத்தை வைத்துத்தான், தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளனர் நடிகர்கள் கமலும், ரஜினியும். 

“தமிழகத்தில் இனிவரும் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்; அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன” என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான், கமல் - ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரைச் சற்றே அதிரவைத்திருக்கிறது எனலாம். இதனால், கட்சியைத் தொடர்ந்து உத்வேகத்துடன் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவும், தொண்டர்களிடையே தற்போதுள்ள அதே எழுச்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஸ்டாலினுக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் தி.மு.க. நிர்வாகிகள்.

அதுபோன்ற நிர்வாகிகள் சிலரிடம், செயல் தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள் மற்றும் அவரின் ப்ளஸ், மைனஸ் குறித்து கேட்டோம்.“எங்கள் தளபதி மு.க.ஸ்டாலின், இளம்வயதிலேயே தன்னைத் தி.மு.க-வில் இணைத்துக்கொண்டவர். தலைவர் கலைஞருக்கும், தி.மு.க. என்ற மிகப்பெரிய இயக்கத்துக்கும் அப்போதுமுதல் இன்றுவரை தோள்கொடுத்து நிற்பவர். அதனால்தான் அவர் இன்று செயல் தலைவர் நிலைவரை உயர்ந்து, கட்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்புக்கு உரியவராகத் திகழ்கிறார். அரசியலில் படிப்படியாகப் பால பாடங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன், இன்று பலரும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். தனிப்பட்ட காழ்ப்புஉணர்ச்சிகளை மறந்து, அரசியல் நாகரிகத்துக்கு முன்னுரிமை கொடுத்துத் திகழ்கிறார். 

ஸ்டாலின், துரைமுருகன்

உதாரணமாகச் சட்டப்பேரவையிலும், வெளியிலும் அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஸ்டாலின் மேற்கொண்ட, ‘நமக்கு நாமே’ பயணம், தி.மு.க-வினர் மத்தியில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களிடத்திலும் மிகச் சிறப்பான வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது. அவருடைய கடுமையான சுற்றுப்பயணம் மற்றும் உழைப்பினால்தான் அந்தத் தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றிபெற்றது. அத்துடன், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்துடனும் வலம் வருகிறார். ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது அவர் ஒவ்வொரு தொகுதியில் உள்ள மக்களிடமும் நேரிடையாகவே சென்று குறைகளைக் கேட்டறிந்தார். இது தொகுதி மக்களுக்கு ஓர் ஆறுதலாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது. அதேவேகத்தில், இப்போதும் பயணிக்கிறார். குறிப்பாக, இன்றைய ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலரும் தங்கள் தொகுதிக்குச் செல்வதில்லை என்றும், மக்களின் குறைகளை அவர்கள் கேட்பதில்லை என்றும் பரவலாகப் புகார் எழுகிறது. 

ஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல... அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் மாதத்துக்குக் குறைந்தது இரண்டு முறையேனும் சென்று, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்த்துவைக்கிறார். அதுமட்டுமல்லாது, தமிழகத்தில் நிலவும் பொதுப் பிரச்னைகளுக்கும் குரல்கொடுக்கிறார். சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராகத் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதனடிப்படையில் உயர்த்தப்பட்ட கட்டணத்தில் ஓரளவு குறைக்கப்பட்டது. இதுவே தி.மு.க-வுக்கும், செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் கிடைத்த முதல் வெற்றி எனலாம். அந்தப் போராட்டத்தைக் கண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அதிர்ந்துதான் போனது என்பதற்கு கட்டணக் குறைப்பே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தவிர, மாணவர்களைப் பாதிக்கக்கூடிய நீட் தேர்வு, விவசாயிகளின் நலனுக்கான காவிரிப் பிரச்னை குறித்த வழக்கில் தமிழகத்துக்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தது என மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க அவர் தொடர்ந்து போராடி வருகிறார். 

தி.மு.க என்ற மிகப்பெரிய கட்டுக்கோப்பான கட்சியை அதே கட்டமைப்புடன் நடத்துவதற்கு அவ்வப்போது நிர்வாகிகளுடன் கலந்துரையாடவும் செய்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக, உள்கட்சிப்பூசல் என்று தெரியவந்ததும், மாவட்டவாரியாக நிர்வாகிகளையும், ஒன்றிய அளவிலான கிளைக் கழகத்தினரையும் நேரில் அழைத்துப் பேசி வருகிறார்.
கட்சிப் பணிகளில் தந்தை வழியைப் பின்பற்றி எவ்வாறு அயராமல் பாடுபடுகிறாரோ, அதேபோல் தன் உடல்நலத்திலும் தளபதி ஸ்டாலின் போதிய அக்கறை காட்டுகிறார். அதற்காக, நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார். கலைஞரைப் போன்றே கட்சியினர் அனைவரையும் மதிக்கத் தெரிந்தவர்” என்று ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி புளகாங்கிதத்துடன் தெரிவிக்கின்றனர். 

ஸ்டாலின்

“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை ஸ்டாலினால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” என்று தி.மு.க-வினர் தெரிவிக்கும் அதேவேளையில், “கலைஞர் காலத்தைய மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதில்லை” என்று குறையும் உள்ளதாகப் புலம்புகின்றனர் வேறு சிலர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில், கூடுதலாக 10 முதல் 15 தொகுதிகள்வரை தி.மு.க. வெற்றிபெற்றிருந்தால் ஆட்சியமைத்திருக்க முடியும். இப்போது ஏற்பட்டுள்ள நிலையே உருவாகியிருக்காது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதே இந்தத் தோல்விக்குக் காரணமாகும். தவிர, ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சரியான உத்திகளை வகுக்க ஸ்டாலின் தவறிவிட்டார். அதன் காரணமாகவே தி.மு.க. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், டெபாசிட் தொகையையும் இழக்க நேரிட்டது. இதை வைத்துப் பார்க்கும்போது உள்ளூர் மற்றும் தொகுதி நிர்வாகிகளைக் கலந்தாலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு போன்ற விஷயங்களில் அவசரம் காட்டிவிட்டாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது” என்றனர். 

சோதனைகளை முறியடித்து, பல தருணங்களில் அவற்றைச் சாதனைகளாக்குவதுதான் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கைவந்த கலை. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற வழக்குச் சொல்லுக்கு ஏற்ப, தலைவரின் வழிவந்த, அவரிடம் பாடம் கற்ற செயல் தலைவருக்கு, இது புரியாமல் போகுமா என்ன? ஸ்டாலினின் இந்தப் பிறந்தநாளில், அவர் புதிய சாதனைகளை முன்னெடுக்க வாழ்த்துவோம்...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!