வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (01/03/2018)

கடைசி தொடர்பு:18:05 (01/03/2018)

சாக்குமூட்டையுடன் குப்பையில் வீசப்பட்ட குழந்தை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் சங்கரலிங்கபுரத்தில் குப்பையில் சாக்குமூட்டையில் கிடந்த பிறந்து 5 மணி நேரமே ஆன, பச்சிளம் பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டனர். பரிசோதனைக்காக குழந்தை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 குழந்தை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ளது சங்கரலிங்கபுரம் கிராமம். இந்த ஊரின் தொடக்கத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இன்று காலையில் அந்தக் கோயில் அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அக்கிராம மக்கள் குப்பைத் தொட்டியில் சென்று பார்த்தபோது, அதில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாக்குப்பையைப் பிரித்துப் பார்த்த போது அதில் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை தொப்புள்கொடி கூட அகற்றாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் நாலாட்டின்புதூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு தாய், சேய் ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பிறந்து 5 மணி நேரத்திற்குள்ளேயே பெண் குழந்தை சாக்குப்பைக்குள் வைத்து வீசப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நாலாட்டின்புதூர் போலீஸாரிடம் பேசினோம், “சங்கரலிங்கபுரம் கிராமத்தில் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த சாக்குமூட்டைக்குள் வைத்து வீசப்பட்டிருந்த பிறந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்து ஊர் மக்கள் தகவல் அளித்தனர். குழந்தையை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை முழுவதும் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். இக் குழந்தையை வீசிச்சென்றது யார்? குழந்தையின் தாய் யார் ?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

பிறந்த 5 மணி நேரமே ஆன பெண் குழந்தையை மனசாட்சியே இல்லாமல் குப்பைத் தொட்டியில் சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க