வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (01/03/2018)

கடைசி தொடர்பு:19:28 (01/03/2018)

`நள்ளிரவில் அலறிய மாணவி' - பள்ளி நிர்வாகியால் மகளுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு கண்ணீர்விட்ட தாய்

பள்ளியை முற்றுகையிட்ட மாணவியின் உறவினர்கள்

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவியின் தாய், போலீஸ் அதிகாரிகளின் காலில் விழுந்தார். 

சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள இந்தப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்டவர்கள் பயில்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை (1.3.2017) பள்ளியை 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.  பள்ளியில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடப்பதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், முற்றுகையிட்டவர்கள் பள்ளிக்கு எதிராக கோஷமிட்டதோடு, பள்ளிக்குள் நுழைய முயன்றனர். இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு, சுப்பராயன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு விரைந்துவந்தனர். போலீஸார், பள்ளியை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இந்தச் சம்பவம்குறித்து பள்ளியை முற்றுகையிட்ட மாணவியின் உறவினர்கள் கூறுகையில், "பெருங்குடியைச் சேர்ந்தவர் வீரலட்சுமி (பெயர் மாற்றம்). இவரது மகள் நித்யா (பெயர் மாற்றம்). இவர், அந்தப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். இவர், நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அலறியுள்ளார். இதனால் திடுக்கிட்ட நித்யாவின் பெற்றோர், அவரிடம் என்ன என்று விசாரித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவத்தை நித்யா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அதாவது, பள்ளியில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர், தன்னிடம் தவறாக நடந்ததாகக் கூறியுள்ளார். இதில் அந்த மாணவி, மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்கதைபோல நடந்துள்ளது. நேற்றுதான் அந்த மாணவி முழுவிவரத்தையும் தெரிவித்தார். இதனால், அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றோம். அவர்கள், கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்துக்குச் செல்லும்படி தெரிவித்தார்.

கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், முழுவிவரத்தையும் கேட்டபிறகு, 'நீங்கள் புகார் கொடுக்கும் இடம் பெரிய இடம். அது தவிர, நீங்கள் சொல்லும் புகாரை பெற்றுக்கொண்டு நாங்கள் விசாரித்தால், உங்களின் குடும்ப விவரம் மற்றும் மகளின் பெயர் வெளியில் தெரியும். மேலும், உங்கள் மகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்' என்று தெரிவித்தார். இதனால், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறி, சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடச் சென்றோம். அங்கு வந்த போலீஸ் அதிகாரியின் காலில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் விழுந்தார். இதையடுத்து, எங்களின் புகாரை போலீஸார் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றனர். 

 இதுகுறித்து போலீஸ்  உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடந்த அந்தப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களைத் தடுத்துநிறுத்தி, சமரசமாகப் பேசியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மாணவியின் தாய், செய்தி சேகரிக்கச் சென்ற மீடியா மற்றும் பத்திரிகையாளர்களிடம், 'பாதிக்கப்பட்ட எங்களிடம் நீங்கள் கேள்வி கேட்காதீர்கள். என் மகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வியைக் கேளுங்கள்' என்று ஆவேசமாகப் பேசினார். பள்ளியை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டதும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது, இந்தச் சம்பவம் வேறுவிதமாக திசைதிருப்பப்படுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, பள்ளிக்கு சம்பந்தப்பட்ட மாணவி, நேற்று தாமதமாக வந்ததாகவும், அதனால் மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பள்ளி நிர்வாகியை மாணவி தரப்பினர் அவதூறாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. 

அதிகாரம், செல்வாக்கு இருப்பதால், பள்ளி நிர்வாகம்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயக்கம்காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.