`போக்குவரத்து நெரிசலில் தஞ்சைப் பெரியகோயில்! சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

தஞ்சைப் பெரியகோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்துசெல்கிறார்கள். இதன் நுழைவுவாயில் பிரதான சாலையில் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதைச் சமாளிக்க, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துவருகிறது.

தஞ்சை பெரியகோயில்- சுரங்கப்பாதை

தஞ்சைப் பெரியகோயிலுக்கு வரக்கூடிய பொதுமக்கள், தங்களது வாகனங்களைக் கோயிலின் எதிர்புறம் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்துவிட்டு, பிரதான சாலையின் வழியே கோயிலுக்கு நடந்துதான் செல்ல முடியும். இந்தச் சாலையில், எப்போதுமே போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். பேருந்துகள், வேன், ஆட்டோ போன்றவை மட்டுமல்லாமல், சரக்கு லாரிகளும் இந்தச் சாலையில்தான் செல்கின்றன. வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து கோயிலுக்குள்ளும் கோயிலிலிருந்து வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கும் செல்ல பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

சனி, ஞாயிறு விடுமுறை நாள்களிலும் பிரதோஷம் போன்ற விசேஷ நாள்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வதால், கோயிலின் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இப்பிரச்னையைத் தீர்க்க, கோயிலின் முன்பு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினரிடம் பேசியபோது ‘‘தொல்லியல் துறையினர் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணம், பெரியகோயிலிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தைத் தோண்டக் கூடாது என்கிற கட்டுப்பாடு உள்ளது. கோயிலின் பின்புறம் உள்ள பெத்தனார் கலையரங்க மைதானத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திவருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!