வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (01/03/2018)

`கரை வேட்டிய உருவுங்க' - சவால்விட்ட அமைச்சர் மணிகண்டனின் வீட்டை முற்றுகையிட்ட தினகரன் ஆதரவாளர்கள்

ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் வீட்டின் வழியாகச் செல்ல முயன்ற டி.டி.வி. தினகரன் அணியினரை போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிடிவி ஆதரவாளர்கள்

சமீப காலமாக ராமநாதபுரம் நகரில் அ.தி.மு.க மற்றும் டி.டி.வி.தினகரன் அணியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சித்துப் பேசி வந்தனர். இதில் அ.தி.மு.க சார்பில் நடைபெறும் கூட்டங்களில் அமைச்சர் மணிகண்டனே நேரடியாகக் களத்தில் இறங்கி மூன்றாம் தரப் பேச்சாளர்கள் போல் பேசியுள்ளார். கடந்த 3 தினங்களுக்கு முன் நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் ''டி.டி.வி.தினகரன் அணிக்குப் போனவங்க எல்லாம் அ.தி.மு.க கரை போட்ட வேட்டியைக் கட்டக் கூடாது. அப்படிக் கட்டி வந்தாங்கன்னா அவங்க வேட்டியை அ.தி.மு.க தொண்டர்கள் உருவுங்க. அதனால் என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்'' எனப் பகிரங்கமாகப் பேசினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் அணியினர், ''இன்று காலை அமைச்சர் மணிகண்டன் வீடு இருக்கும் சாலையில் செல்கிறோம். முடிந்தால் எங்கள் வேட்டியை உருவிப் பாருங்கள்'' என எதிர் சவால் விட்டனர். அதன்படி தினகரன் அணி மாவட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ஒன்றியச் செயலாளர்கள் ஸ்டாலின், முத்தீஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து கிளம்பினர். சில அடி தூரம் முன்னேறி வந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அமைச்சர் வீட்டின் வழியாகச் செல்ல அனுமதியில்லை எனக் கூறினர். சாலையில் நடந்து செல்ல ஏன் தடை போடுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய தினகரன் அணியினர், தடையை மீறிச் செல்ல முயன்றனர். இதனால், போலீஸார் அவர்களை அமைச்சர் வீட்டு வழியாகச் செல்லும் சாலையைத் தவிர்த்துவிட்டு நகருக்குள் வாகனத்தில் செல்ல அனுமதித்தனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினகரன் அணியினர் நகரை வலம் வந்தனர். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் வீட்டின் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு ஏராளமான போலீஸாரும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். அவர்களுடன் அமைச்சரின் ஆதரவாளர்களும் அங்கு குழுமியிருந்தனர். இதனிடையே அமைச்சரின் 'வேட்டி' பேச்சை கேலி செய்து அவருக்கு எதிராக நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் ராமநாதபுரம் நகரில் பதற்றம் நிலவிவருகிறது.