வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (01/03/2018)

'வினையான புகார்'- பள்ளியில் மாணவனுக்கு நடந்த கொடுமை!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, 9-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது. சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடைந்த மாணவன், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறான்.

பள்ளி மாணவன்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலப்பொத்தை கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், இன்று ப்ளஸ் டூ தேர்வு நடப்பதையொட்டி, பிற வகுப்பினருக்கு ஒரு பிளாக்கில் மட்டும் வகுப்புகள் நடக்கின்றன. இந்தப் பள்ளியின் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் கண்ணன், கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறப்பாகச் செயல்படுவதால், அந்த வகுப்பின் தலைவராக ஆசிரியரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வகுப்பில் படிக்கும் பிரான்சிஸ் என்ற மாணவன், வகுப்பறையில் அடிக்கடி ஒழுங்கீனமாக நடந்துவந்துள்ளார். அதனால், அவரது பெயரை எழுதி வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்துள்ளார் கண்ணன். அதனால், பிரான்சிஸை ஆசிரியர் அழைத்துக் கண்டித்துள்ளார். அடிக்கடி இதுபோன்று நடந்துள்ளது. அதனால், வகுப்புத் தலைவரான கண்ணனுக்கும் பிரான்சிஸுக்கும் இடையே மோதல் இருந்துவந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல ஆசிரியர் பிரான்சிஸைக் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரத்தில் இருந்த பிரான்சிஸ், இன்று காலை பள்ளிக்கு வரும்போதே கத்தியுடன் வந்துள்ளார். காலையில் பிரேயர் முடிவடைந்து, வகுப்புக்கு மாணவர்கள் வரிசையாகச் சென்றுள்ளனர். அப்போது, பிரான்சிஸ் அங்கிருந்து செல்லாமல் நின்றுகொண்டிருந்ததால், அவரை வகுப்புக்குச் செல்லுமாறு கண்ணன் வலியுறுத்தியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட சண்டையின்போது, மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனைக் குத்தியிருக்கிறார். 

காயம் அடைந்த மாணவன் கண்ணன், நாங்குநேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். கத்தியால் குத்திய பிரான்சிஸ், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.