காட்சிப்பொருள்களான போர்வெல்கள்! தண்ணீர் பஞ்சத்தில் கொடைக்கானல் மலைக் கிராமம் | Drinking water shortage in Kodaikanal

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (01/03/2018)

கடைசி தொடர்பு:21:00 (01/03/2018)

காட்சிப்பொருள்களான போர்வெல்கள்! தண்ணீர் பஞ்சத்தில் கொடைக்கானல் மலைக் கிராமம்

போர்வெல்

கொடைக்கானல் மலைக் கிராமங்களில், போர்வெல்களும் காட்சிப்பொருளாக இருக்கின்றன. தற்போது அங்கு, தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகப் போதுமான மழை பெய்யாத காரணத்தால், நீராதாரங்கள் வறண்டுகிடக்கின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதற்கு, கொடைக்கானல் மலையும் தப்பவில்லை. எங்கும் மழைப்பொழிவு இல்லாத காலத்தில்கூட, கொடைக்கானலில் போதுமான மழைப்பொழிவு இருக்கும். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது கொடைக்கானலிலும் மழை அரிதாகிவிட்டது. கடந்த ஆண்டு, கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. பல ஹோட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டன. தண்ணீர் இல்லாமல் பலர் தங்கள் வீடுகளை விட்டு, தரைப்பகுதியில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். முன்னெப்போதும் சந்திக்காத மிகக் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை கொடைக்கானல் சந்தித்தது. இந்த ஆண்டு, போதிய  தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், மழை பெய்யவில்லை. கொடைக்கானலுக்கான நீராதாரங்கள் வறண்டுவருகின்றன. அதனால், இந்த ஆண்டும் கொடைக்கானலில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும்நிலை உள்ளது. 

கொடைக்கானல் பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. இந்தப் பகுதிகளிலும் கடந்த ஆண்டு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மலைக்கிராமங்களில் தேவை அடிப்படையில் போர்வெல் அமைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியது. அனுமதி கிடைத்ததும், ஒவ்வொரு ஊராட்சியிலும் 10-க்கும் அதிகமான போர்வெல்களை அமைத்தார்கள். முறையாக நீரோட்டம் பார்க்காமல், பேருக்கு போர்வெல் போட்டு ஒப்பந்தத்தை முடித்து பில் வாங்குவதில் கவனமாக இருந்தனர். சில அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்ததால், கடந்த முறை அமைத்த போர்வெல்களால் எந்தப் பயனும் இல்லை. ‘கண்துடைப்புக்காக போர்வெல் அமைத்திருக்கிறார்கள். இதனால் எந்தப் பயனுமில்லை. அதில், தண்ணீரே வரவில்லை’ எனப் பொதுமக்கள் அப்போதே புகார் தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. போர்வெல் அமைத்து சில நாள்களில் நல்ல மழை கிடைத்ததால், போர்வெல் பற்றி பொதுமக்களும் கவலைப்படவில்லை. தற்போது, மீண்டும் தண்ணீர்ப் பஞ்சம் தலைதூக்கியதால், போர்வெல் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. ஆனால், அனைத்து போர்வெல்களும் காட்சிப்பொருள்களாக மட்டுமே இருக்கின்றன. இதனால், தற்போதே கொடைக்கானல் மலைக் கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் மலைவாசிகள். அதிகாரிகளைப் பொறுத்தவரை ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துக்கொடுத்துவிட்டதாக அரசுக்கு அறிக்கை கொடுத்துவிட்டார்கள். ஆனால், அறிக்கை மட்டும் தாகத்தை தீர்க்காது என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க