எங்கே சென்றன கோவையின் 145 குட்டைகள்? அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்!

மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. இப்போதே கோடைக்காலத்தைப் போல, வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. இந்த ஆண்டும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், பருவமழை குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்சியே, இந்த ஆண்டும் பிரதிபலிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இப்போதும் நீருக்கு அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கட்டி வருகிறோம்.

குட்டைகள்

நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுவருகிறது. இந்நிலையில், ம.தி.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களின் தற்போதைய நிலைமைப் பற்றி, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, அறநிலையத்துறை ஆகியவற்றிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தார். ஆனால், இவற்றில் கோவையில் உள்ள நீர்நிலைகளின் தற்போதைய நிலைமை மட்டும் ஊரக வளர்ச்சித்துறை வழங்கியுள்ளது. அதில், கோவையில் 5 கண்மாய், 791 குட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 145 குட்டைகள் பயன்பாட்டில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஸ்வரனிடம் பேசினோம், "தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஈஸ்வரன்ஆகியவற்றின் கீழ்தான் ஏரிகள், குளங்கள் உள்ளன. எனவே, அவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள், அதற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்று கேட்டிருந்தேன்.

முதல்வரின் தனிப்பிரிவில்தான், இந்தத் தகவலை முதலில் கேட்டிறிந்தேன். ஆனால், முறையான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம், மாவட்ட வாரியாக தகவல் கேட்டிருந்தேன். இதில், கோவைக்கு மட்டும் ஊரக வளர்ச்சித்துறையிடமிருந்து பதில் வந்துள்ளது. அதிலும், செலவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து குறிப்பிடவில்லை. 145 குட்டைகள் பயன்பாட்டில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் உருவான தெலங்கானா மாநிலம், ஏரி, குளங்களைப் பராமரிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, பணிகள் நடந்து வருகின்றன. தெலங்கானாவை விட தமிழகத்தில் ஏரி, குளங்கள் குறைவு. எனவே, அவற்றில் பாதித் தொகையை ஒதுக்கினாலே, நீர்நிலைகளை நன்கு பராமரித்துவிடலாம். சென்னை மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கிய தொகையை, இதற்கு ஒதுக்கியிருந்தால், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களைப் பராமரித்து, நீர் சேகரிக்கவும் வழிவகை செய்திருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் கொள்ளளவு 253 டி.எம்.சிதான். ஆனால், ஏரி, குளங்களின் கொள்ளளவு 350 டி.எம்.சி. எனவே, ஏரி, குளங்களை மேம்படுத்துவது, தமிழகத்தின் நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் உதவும்.

எந்தத் திட்டங்கள் நமக்குத் தேவையோ, அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஸ்கூட்டர் வழங்குவதை விட, நீர்நிலைகளைப் பராமரிப்பதுதான் முக்கியம். எனவே,  அதை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!