``கடைசிப் பெஞ்சில் வந்தமர்ந்தவனின் கள்ளத்தனம்!” #SpeakUp | When we finally opened up, were asked to keep quite and transferred to an all girls school

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (05/03/2018)

கடைசி தொடர்பு:17:04 (05/03/2018)

``கடைசிப் பெஞ்சில் வந்தமர்ந்தவனின் கள்ளத்தனம்!” #SpeakUp

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும் சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். உயரம் காரணமாக நானும் என் தோழியும் கடைசிப் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருப்போம். எங்கள் ஆங்கில ஆசிரியர், வகுப்பெடுக்கும் சமயம் தவிர்த்து, மற்ற சமயங்களில் எங்களுக்கு எழுத்து வேலையோ மனன வேலையோ கொடுத்துவிட்டு, கடைசிப் பெஞ்சில் எங்களுடன் வந்து அமர்ந்தபடி வகுப்பைக் கண்காணித்துக்கொண்டிருப்பார். ஆசிரியர் எப்போதும் என் தோழிக்கு அடுத்ததாக வந்து அமர்ந்துகொள்வார்.

SpeakUp


ஒருநாள் ஆங்கில வகுப்பு முடிந்ததும் தோழி கழிவறை செல்ல, நானும் துணைக்குச் சென்றேன். அங்கே அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க, என்ன, ஏதென்று புரியாமல் நான் அதிர்ச்சியாகிவிட்டேன். ஆசிரியர் கடைசி பெஞ்சில் அமர்ந்து வகுப்பைக் கண்காணிக்கும் சாக்கில், என் தோழியின்மீது கைகள் படரவிட்டிருக்கிறார் என்பதை, அவள் பாதி அழுகையும் பாதி வார்த்தைகளுமாகச் சொன்னாள். அப்போது நாங்கள் பெண்கள் இல்லை, சிறுமிகள். என்ன செய்வது, இதை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் சொல்வதற்கே என் தோழிக்கு இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறதே. 

ஒருவழியாக, இருவரும் இதை எங்கள் வகுப்பு ஆசிரியையிடம் சொல்வது என்று முடிவுசெய்து, அதன்படியே செய்தோம். நாங்கள் தயங்கி, தயங்கி, விழுங்கியபடியே சொல்லிமுடித்தபோது, அவர் திகைப்புற்றிருந்தார். அவர் அந்த ஆசிரியரைக் கண்டிப்பார் என்ற எங்கள் எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் நின்றது. 'என்னம்மா இதையெல்லாம் வெளிய சொல்லிகிட்டு' என்று திணறியவர், 'இதைப் பத்தி யார்கிட்டேயும் சொல்லாதீங்க, உங்களைதான் தப்பா நினைப்பாங்க' என்று கூறி அனுப்பிவைத்தார். அடுத்து வந்த நாள்களில் அதே கொடுமை தொடர்ந்தது. அத்தனை நாள்களாக அருகில் நடப்பது தெரியாமல் அமர்ந்திருந்த எனக்கு, இப்போது அவன் கைகள் செல்லும் திசையெல்லாம் கண்ணுக்குப் புலப்பட்டது. என் தோழியின் வேதனை என் நெஞ்சையும் தைத்தது. அவள், அவன் கைகளைத் தட்டிவிட்டபோதும் அவன் பின்வாங்கவில்லை. 

தனக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றி வீட்டினரிடம் சொல்லலாம் என்ற பேச்சுக்கே இடமில்லாத காலம் அது. விடுபட முடியாத இந்த அவஸ்த்தைக்குத் தீர்வாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்தாள் என் தோழி. கொசுவை விரட்டும் லிக்விடேட்டர் விஷம் என்று யாரோ பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டவள், அதை எடுத்துக் குடித்துவிட்டாள். பதறிய அவள் வீட்டினர் அவளை ஆஸ்பத்திரிக்கு அள்ளிச் செல்ல, அவள் அம்மா என்னை விசாரித்து உண்மையை வாங்கிவிட்டார். பள்ளியில் புகாரிட்டு பிரச்னை ஆக, பரிட்சை நெருங்கிக்கொண்டிருந்த அந்த மாதங்கள் முழுக்க இருவரும் பள்ளிக்கே செல்லவில்லை. முழுப்பரிட்சையை மட்டும் நேரடியாகச் சென்று எழுதினோம். அடுத்த வருடம், ஒரு பெண்கள் பள்ளிக்கு எங்களை மாற்றிவிட்டார்கள் எங்கள் பெற்றோர். 

இப்போது நாங்கள் எங்கள் 20 வயதுகளில் இருக்கிறோம். #SpeakUp முயற்சியைப் பார்த்தபோது, இதில் எங்களுக்கு நேர்ந்ததைப் பதிவதை எங்களின் கடமையாக நினைக்கிறோம். காரணம், முதல் நாளே, தன்மீது படர்ந்த கைக்கு எதிராக என் தோழி உரக்கப் பேசியிருந்தால், பாலியல் சீண்டல்களை எதிர்த்து அப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால், ஒரு தற்கொலை முயற்சி தவிர்க்கப்பட்டிருக்கும். மௌனம் களைவோம் தோழிகளே, உடைத்துப் பேசுவோம்! 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக்கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தரவேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்!  

Speak-Up

உங்கள் குரலைப் பதிவு செய்ய http://bit.ly/vikatanspeakup


[X] Close

[X] Close