``தெர்மக்கோல் விட்டதுக்கு பதில் தூர் வாரி இருக்கணும்..!” - தண்ணீர் கேட்கும் மதுரை... தர மறுக்கும் தேனி

தண்ணீர்

கோடை நெருங்கும் முன்னரே தற்போது வெயில் வாட்டிவதைக்க ஆரம்பித்துவிட்டது. தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அணையில் உள்ள நீரை பாசனத்துக்குத் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு, மக்களின் குடிநீருக்காக மட்டுமே திறக்கப்படும்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக, முல்லைப்பெரியாறு ஆற்றிலிருந்து 1295 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முல்லைப் பெரியாறு ஆரம்பிக்கும் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து சுமார்  56 கிலோமீட்டர் தூரம் தரைவழியாகக் குழாய் அமைத்து குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி வழியாக மதுரைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் சிறப்பு குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆய்வும், விவசாயிகளின் எதிர்ப்பும் :

முதல்வரின் சிறப்புக் குடிநீர்த் திட்ட அறிவிப்பை அடுத்து, சில தினங்களுக்கு முன்னர் சென்னை நகராட்சிகள் துறை இயக்குநர் பிரகாஷ், மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், மாநகராட்சி பொறியாளர் மற்றும் நகராட்சிகள் துறை உயரதிகாரிகள் இணைந்து லேயர் கேம்ப் பகுதியில் ஆய்வுசெய்தனர். குறிப்பாக, முல்லைப் பெரியாற்றில் ஒரு தடுப்பணை கட்டி, அதன்பிறகே குழாய்மூலம் தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியும். எனவே, தடுப்பணைகுறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்துகொண்டிருக்கும்போது, அங்கு குழுமிய முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள், அதிகாரிகளின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதம்செய்தனர். இதனால், ஆய்வைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிவிட்டனர்.

தண்ணீர்

ஏன் எதிர்ப்பு?

‘’தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்த பகுதி, கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கு 50 மீட்டர் மேலே உள்ளது. ஏற்கெனவே, அப்பகுதியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும்போது, அதன் மேலே இன்னொரு தடுப்பணை கட்டுவதால், கம்பம் பள்ளத்தாக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு சிக்கல் ஏற்படும். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும், லோயர் கேம்பில் இருந்து வைகை அணையில் கலக்கும் வரை நீண்டுள்ள முல்லைப் பெரியாற்றின் வழியெங்கும் பல்வேறு பகுதிகளில் உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டு, மக்களுக்காகத் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போது, புதிதாக ஒரு குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்தால், ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரின் அளவு குறையும். இதனால், மக்களிடையே தண்ணீர்ப் பஞ்சம் உருவாகும். அதேநேரம், நிலத்தடிநீர் மட்டமும் கடுமையாகப் பாதிக்கப்படும். முல்லைப்பெரியாறு, வைகை அணையில் கலக்கும் வரை விட்டுவிடுங்கள். வைகை அணைக்குப் பிறகு உங்கள் விருப்பம்போல மதுரைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லுங்கள். இல்லை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று நினைத்தால், அதை மக்கள் போராட்டத்தோடு சந்திக்கத் தயாராக உள்ளோம்’’ என்றார், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளர் செங்குட்டுவன்.

மதுரையின் நிலை என்ன?

’’வைகை1, வைகை2, காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம், மணலூர் குடிநீர்த் திட்டம் உட்பட நான்கு குடிநீர்த் திட்டங்கள், தற்போது மதுரை மக்களின் குடிநீர்த் தேவைக்காகச் செயல்பட்டுவருகிறது. இருந்தபோதும், மக்கள்தொகைப் பெருக்கம், நகர விரிவாக்கம் என இன்றைய சூழலில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கோடைக்காலத்தில் மதுரை என்ன பாடு படும் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வைகை அணையில் தெர்மக்கோல் விடுவதை விட்டுவிட்டு, அணையில் இருக்கும் சகதியை அள்ளி ஆழப்படுத்தியிருந்தால், அதிக தண்ணீரை சேமித்திருக்க முடியும். அது, வரும் கோடைக்காலத்துக்கு உதவும். தேனியை நம்பி இருக்கவேண்டிய அவசியமும் வந்திருக்காது. தேனி மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்பு, இந்தக் கோடைக்கு மதுரை தண்ணீர் இல்லாமல் தவிக்கப்போகிறது என்பதையே காட்டுகிறது. அரசு உடனே இவ்விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கின்றனர், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலத்தோடு சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்திற்குள் இருக்கும் இரு மாவட்டங்களுக்கு இடையே சண்டை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. முறையான திட்டமிடல் இல்லாததும், நீர் மேலாண்மை குறித்த அக்கறை இல்லாததுமே இதற்குக் காரணம். வரும் கோடை, மதுரை மக்களை வதைக்கும் முன், அரசு நடவடிக்கை எடுக்குமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!