தொடர்ந்து குற்றச்செயல்கள்! அண்ணன், தம்பிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு, இரட்டைக் கொலை வழக்கு ஆகிய குற்ற வழக்குகள் தவிர, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததால் அண்ணன், தம்பி உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அண்ணன், தம்பிக்கு குண்டாஸ்

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் முத்துமாலை. இவரது சகோதரர், சக்கரவர்த்தி என்ற முத்துசாமி. இவர்கள் இருவர் மீதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், புதூர் பாண்டியாபுரம் பகுதியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உள்ளது. இது தவிர, இவர்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இருவரும் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.  இதேபோல, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த ஆதிமருந்தீஸ்வரர் என்பவர்மீது கோவில்பட்டி கிழக்குக் காவல்நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது. இவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

முத்துமாலை, சக்கரவர்த்தி ஆகியோரை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய, புதியம்புத்தூர் காவல்நிலைய ஆய்வாளரின் பரிந்துரைப்படியும், ஆதிமருந்தீஸ்வரரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய, கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலைய ஆய்வாளரும் செய்த பரிந்துரையின்படி, மாவட்ட எஸ்.பி., மகேந்திரன் மற்றும் ஆட்சியர் வெங்கடேஷ் ஆகியோர், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!