`தனியார் கல்வி முதலாளிகள் பிடியில் துணைவேந்தர்!' - பதறும் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் தொடங்கும் நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பான 'பாசம்' என்ற அமைப்பு துணைவேந்தர் குழந்தைவேலுக்குப் பாராட்டு விழா வைத்தது. அதில் துணைவேந்தர் கலந்துகொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ''பெரும்பாலும் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் அந்தந்தப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகளே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். குறிப்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகளே இயக்கி வருகிறார்கள். இதனால் அந்தக் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகளைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என அனைத்துக் கல்லூரிகளுக்கும் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டமைப்பான பாசம் என்ற அமைப்பு நேற்று சேலம் பெங்களூரு பைபாஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் எக்ஸ்டன்ஸியா ஹோட்டலில் க்ரிஸ்டல் பால் ரூமில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பாராட்டு விழா நடத்தியது.

தேர்வுகள் நடக்கவிருக்கும் நிலையில் துணைவேந்தருக்குப் பாராட்டு விழா நடத்தி விருந்து கொடுத்திருப்பதால் சுயநிதிக் கல்லூரிகள் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கும், திருத்தும் மையம், கூடுதல் தேர்வுக் கண்காணிப்பாளர் நியமனம், விடைத்தாள் திருத்துவதில் முறைகேடுகள் ஆகியவற்றுக்கும் இந்தப் பாராட்டு விழா அச்சாரமாக அமையும். இந்தப் பார்ட்டியில் துணைவேந்தர் கலந்து கொண்டது பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பு குறைந்துள்ளது.

இதனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதோடு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவ மாணவிகள், அரசு உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பார்ட்டியைத் துணைவேந்தர் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தால் பல்கலைக்கழகத்தின்மீது மாணவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கும். ஆனால், தற்போது மாணவ மாணவிகள் பல்கலைக்கழகத்தின்மீது நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள்'' என்றார்கள்.

இதைப்பற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டதற்கு, ''பரீட்சைக்கும் பாராட்டு விழாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நான் பல்கலைக்கழகத்துக்கு வந்ததும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். எனக்கு நேரம் இல்லாததால் தேதி கொடுக்கவில்லை. அந்த நிகழ்வை நேற்று நடத்தினார்கள். நான் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழகத்தில் எந்தத் தவறும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!