வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (01/03/2018)

கடைசி தொடர்பு:20:34 (01/03/2018)

தமிமுன் அன்சாரியின் பிரஸ் மீட்டுக்கு தடை... இரண்டு பிரிவில் வழக்கு... மதுரையில் பரபரப்பு..!

னிதநேய ஜனநாயகக் கட்சித்தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமூன் அன்சாரி, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, கலெக்டரின் நேர்முக உதவியாளரும், காவல்துறையினரும் அதிரடியாக நுழைந்து, பிரஸ் மீட்டை நிறுத்தச் சொல்லியும், மாவட்ட நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாநகரக் காவல்துறை வழக்குப் பதிவும் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
   இதற்கு முன் பல  தலைவர்கள் இதே விருந்தினர் மாளிகையில் பிரஸ்மீட் நடத்தியுள்ளனர். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த காவல்துறை, தமிமூன் அன்சாரி மீது மட்டும் வழக்குப் பதிவு செய்வதற்கு பின்னணியில் அரசியல் நிர்பந்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தமிமுன் அன்சாரி


     கடந்த 25 ம் தேதி மதுரை வந்த தமீமுன் அன்சாரி, அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்சாரி, சமீபகாலமாக கருணாஸ், தனியரசுடன் இணைந்து பிஜேபிக்குக்கும், எடப்பாடி அரசுக்கும் எதிராக அவ்வப்போது கருத்துகளைக் கூறி வருகிறார். மதுரையிலும் அதுபோல் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்துப் பேசவுள்ளார் என்ற தகவலை யாரோ பரப்பியிருக்கின்றனர்.
   இவர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள தகவல் தெரிந்தவுடன், உளவுத்துறையினர் அங்கே சுற்றி வரத்தொடங்கினர். சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளும், உதவிக் கமிஷனர் தலைமையில் காவல்துறையினரும் பிரஸ் மீட் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தனர்.   'உங்களுக்கு இங்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதி இல்லை, அதற்கு முறையாக அனுமதி வாங்கியிருக்க வேண்டும், என்றதும், 'இப்படி ஒரு நடைமுறை இருப்பது தெரியாது' என்று அன்சாரி சொல்லவும் அந்த இடத்தில் வாக்குவாதம் நடந்தது. அதோடு, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பிரஸ்மீட்டை முடித்துக்கொண்டார். 
 ஆனால், அதற்கு முன்பே ''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மோடி அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, தமிழகத்துக்குத் துரோகம் இழைத்து வருகிறது,  தமிழக அரசு பிஜேபியுடன் வைத்திருக்கும் கூடா நட்பு கேடாய் முடியும்'' என்று தன்னுடைய கருத்துகளைக் கூறி முடித்து விட்டார். 
  தமீமுன் அன்சாரியின் பிரஸ் மீட்டை தடுத்தால், அவருடைய கட்சியினர் ரகளையில் ஈடுபடுவார்கள் என்று நினைத்து கூடுதல் போலிஸை, விருந்தினர் மாளிகைக்கு வெளியே நிறுத்தியிருந்தனர். அன்சாரியோ, அமைதியாகச் சென்று விட்டார். 

மனிதநேய ஜனநாயக கட்சி


     இது சம்பந்தமாக தமீமுன் அன்சாரியிடம் கேட்டோம், ''நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை சென்ற நான், அரசு விருந்தினர் மாளிகை அறையில் தங்கினேன். காலை பத்து மணிக்கு என்னுடைய அறையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசுவது என்று முடிவு செய்திருந்தேன். அறைக்குள் வேண்டாம், செய்தியாளர்களைச் சந்திக்க தனி அரங்கு உள்ளது, அங்குதான் நிருபர்களும் தற்போதுஅமர்ந்திருக்கிறார்கள் என்று மதுரை நிர்வாகிகள் சொல்லவும், அங்கு சென்று பேட்டியளித்தேன். பேட்டியை முடிக்கும்போதுதான் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரனுடன் காவல்துறையினர் வந்தனர். இங்கு அனுமதி வாங்காமல் பிரஸ் மீட் நடத்த முடியாது என்றவரிடம், 'அப்படி ஒரு விஷயம் இருப்பது எனக்குத் தெரியாது, அதைப்பற்றி இங்குள்ள அலுவலர்கள் கூறியிருக்கலாமே' என்று நான் கேட்டதற்கு சரியான பதிலை சொல்லாமல், 'பிரஸ் மீட் நடத்தக் கூடாது' என்றே சொல்லிக்கொண்டிருந்தார். அதோடு, நானும் அனுமதி வாங்காமல் பிரஸ் மீட் நடத்தியது தவறுதான், இனி அப்படி நடக்காது என்று கூறியவுடன் சென்று விட்டனர். நானும் மதியம் அறையைக் காலி செய்து விட்டு வந்துவிட்டேன். ஆனால், அதற்குப்பின்புதான் 'ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தடையை மீறி கூட்டம் போட்டதாகவும்' என் மீது வழக்குப் போட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், எனக்கு அறை கொடுத்து, அந்த மீட்டிங் ஹாலை திறந்து விட்டு உபசரித்த விருந்தினர் மாளிகை ஊழியர் பேரிலேயே புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள். இது தெரிந்தவுடன் ’என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று அமைச்சர் உதயகுமாரிடம் பேசினேன், இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார், அதுபோல் அமைச்சர் தங்கமணியும் வருத்தப்பட்டார். எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பாவும் பேசினார். தமிழக அரசுக்கும் இந்த பிரச்னைக்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. யாருடைய உத்தரவினால், மதுரை மாவட்ட நிர்வாகம் இப்படி நடந்துகொண்டது என்று தெரியவில்லை, நான் வழக்கமாகக் கூறுகிற கருத்துகளைத்தான் இங்கும் கூறினேன். இதன் பின்னணியில் வேறு யாருடைய அழுத்தம் உள்ளது என்பதையும் அதிகாரிகள் கூற வேண்டும், நாங்கள் இப்போது நடுநிலையாக உள்ளோம், அரசு செய்யும் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம். அதுதான் எங்கள் நிலைப்பாடு.'' என்றார்.

தமிமுன் அன்சாரி


       அரசு விருந்தினர் மாளிகை தரப்பில் விசாரித்தபோது, ''முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி-க்கள் இங்கு தங்குவதற்கு தனியாகவும், பிரஸ் மீட் நடத்துவதற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது, இதற்கென்று தனித்தனி அதிகாரிகளே இருக்கிறார்கள். ஆனால், தமீமுன் அன்சாரி அதை செய்யவில்லை,  என்பதால்தான் புகார் கொடுக்கப்பட்டது'' என்கின்றனர்.
  கருணாஸ், தனியரசு, அன்சாரி மூவரும் மதுரையில் எடப்பாடி அணிக்கு எதிராகப் பேட்டியளித்து டிடிவி தினகரனை ஆதரிக்க உள்ளார்கள் என்ற தகவல் மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரனுக்கு வந்ததாகவும், அரசு விருந்தினர் மாளிகையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தால் மாவட்ட நிர்வாகம் பதில் சொல்ல வேண்டி வருமே என்று பயந்து போய், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி வழக்குப் பதிவு செய்ய வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்