வெளியிடப்பட்ட நேரம்: 23:33 (01/03/2018)

கடைசி தொடர்பு:23:33 (01/03/2018)

கல்லூரிப் பேராசிரியர் கொலை! 4 பேர் சிக்கினர்

நெல்லையில், நாட்டு வெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கெனவே இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸார் கைதுசெய்தனர். மற்றவர்களையும் பிடிக்க தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்  டுள்ளனர். 

கொலைக் குற்றவாளிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமாருக்கும், நெல்லை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். பாலமுருகன் என்பவருக்கும் இடையே பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, பாளையங்கோட்டையில் இருந்த குமாரை கொலைசெய்ய ஒரு கும்பல் அவரது வீட்டின் உள்ளே நுழைந்தது. அவர், வீட்டுக்குள்ளே ஓடியதால், நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கதவை உடைத்து, அந்தக் கும்பல் உள்ளே நுழைந்தது. 

அப்போது வீட்டில் இருந்த, குமாரின் மருமகன் செந்தில்குமார் என்ற தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியரை அந்தக் கும்பல் கத்தியால் குத்திக் கொன்றது. குமார், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராக்கெட் ராஜா, அவரது அண்ணனும் வழக்கறிஞருமான பாலகணேசன், டாக்டர். பாலமுருகன் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் மீது 10 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு குழுவினர், ராக்கெட் ராஜாவைத் தேடி வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ள நிலையில், ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், வடக்கன்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். மற்ற குற்றவாளிகளையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், பழைய பேட்டையைச் சேர்ந்த மொட்டைச்சாமி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 5 பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள். 

இதனிடையே, கொலை வழக்கில் வழக்கறிஞர் பாலகணேசனைச் சேர்த்ததைக் கண்டித்து, நெல்லை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வரும் 5-ம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும், அதன் பின்னரும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்தால், அடுத்தகட்ட போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். வழக்கறிஞர்களின் போராட்டத்தால், இன்று நீதிமன்றப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.