`எனது புத்தகங்களை விற்பதில்லை; அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிக்கிறேன்!’ - அசத்தும் இளைஞர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள மரிங்கிப்பட்டி அரசுத் தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு  இளைஞர் ஒருவர் புத்தகங்கள் பரிசளித்து,வாசிப்புத் திறன் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

திருச்சியைச் சேர்ந்த 'மூங்கில்' சுரேஷ்  ஆறுமுகம் என்ற இளைஞர்,சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல  ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர்,தனது வருமானத்தில்  ஒருபகுதியை ஒதுக்கி, அரசுப்பள்ளி  மாணவர்களுக்கு  புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். இதில் விசேஷம் என்னவென்றால்,அப்படிக் கொடுக்கப்படும் புத்தகங்கள் அத்தனையும்  இந்த இளைஞர் எழுதியவை. அந்த வகையில் அன்னவாசல் அருகே உள்ள  மரிங்கிப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'சிந்தனை துளிகள்' என்ற சிறு புத்தகத்தைக் வழங்கினார்.

'மூங்கில்' சுரேஷ் ஆறுமுகம் மாணவர்களிடம்  பேசும்போது " நான் 4 வருடங்களாக  மாணவர்களுக்குப் பயனுள்ள புத்தகங்களை எழுதி, பரிசாகக் கொடுத்து  வருகிறேன். மாணவர்கள் பாடப் புத்தகங்களைப்  படிப்பதுடன் பிற நூல்களையும் வாசிக்க இப்போதே  பழகிக்கொள்ள வேண்டும். அந்தச் சூழலை உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள்  உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மாணவர்களில் சிலர் சொந்தமாகக் கவிதை எழுதுவதைப் பார்க்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது.  நான் மிகச் சரியான மாணவர்களுக்குத்தான் எனது புத்தகத்தை வழங்கி இருக்கிறேன் " என்றார்.                                                                                          

இதுபற்றி அவரிடம் பேசினோம். "இலக்கியத்தின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் முதன்முதலில். மூங்கில் தெப்பக் குளம் என்ற நூலை எழுதி வெளியிட்டேன். புத்தகத் திருவிழாக்களில்  வைக்கப்பட்டிருக்கும் கடைகளில் சென்று என்னுடைய புத்தகங்களை விற்றுத்தரச் சொல்லிக் கேட்டேன்.ஆனால், அவர்கள் முகம் கொடுத்துப் பேசவே இல்லை. பிறகு, திருச்சியில் உள்ள புத்தக விற்பனை செய்யும்  கடைகளில் சென்று கேட்டேன். அங்கும்  யாரும் எனது புத்தகங்களை வாங்கவில்லை. இதனால் மனதளவில் உடைந்து போன நான், இனி நான் எழுதும் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்கள் வேலை செய்யும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு எனது புத்தகங்களை  இலவசமாக  வழங்கி வருகிறேன். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் எனக்கு அறிமுகம் ஆன இந்தப் பள்ளியின் ஆசிரியர்  திருப்பதி அழைப்பின் பெயரில் வந்து இருக்கிறேன்.அவருக்கு எனது பெரிய நன்றி.இதற்காக,  எனது சம்பளத்திலிருந்து வருடத்துக்கு 5,000 ரூபாய் செலவு செய்து வருகிறேன்" என்றார் நெகிழ்ச்சியாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!