வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (02/03/2018)

கடைசி தொடர்பு:09:45 (02/03/2018)

திருச்சியில் பிரதமர் மோடியின் உருவப்படம் எரிப்பு!

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு முறைகேடாக அந்நிய முதலீடு பெற உதவியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். அவரின் கைதைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 
 
மோடி உருவப்படம் எரிப்பு
மத்திய அரசை ப.சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு பழி வாங்கவே கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்டித்து திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் இறுதியில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான ஜி.எம்.ஜி.மகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கிழித்தும்,அந்தப் படத்தைத் தீயிட்டு எரித்தார். அப்போது போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படவே பரபரப்பு ஏற்பட்டது.  கார்த்தி சிதம்பரத்தின் கைதைக் கண்டித்து காங்கிரஸார் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும், அவர்களின் அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருவதால் திருச்சியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் காங்கிரஸாரின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க