வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (02/03/2018)

கடைசி தொடர்பு:10:58 (02/03/2018)

வீடு கட்டித்தருவதாகக் கூறி பல லட்சம் மோசடி! - தேனி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்

வீடு கட்டித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் மீது நடவடிக்கைக் கோரி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவார் புகார் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் யமுனா தேவி. இவர், கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய யமுனா தேவி, ‘’இன்னும் எத்தனை முறை தான் இங்கே நான் வந்து மனு கொடுப்பது என்று தெரியவில்லை. புதிய கலெக்டர் வந்திருக்கிறார் என்றார்கள். அதனால் தான் அவரைச் பார்த்து மனு கொடுத்தோம். கடந்த வருடம் எங்களை சந்தித்த கற்பகம், அவரது கணவர் விவாஹர் ஆகியோர் ’குரு கார்டன்ஸ் என்ற பெயரில் புரோமோட்டர்ஸ் வைத்திருப்பதாகவும், (தற்போது `சன்ஷைன்’ என்ற பெயரில் உள்ளது) குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாக கூறினர். எனக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்டிக்கொடுத்தால் போதும் என்றேன்.

`அதற்காகத் திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோன் எடுக்க வேண்டும் எனவும், வீட்டு மனை அப்ரூவல் செய்ய ரூ.5 லட்சம் செலவாகும்’ என்றனர். அவர்களிடம் 5 லட்ச ரூபாய் கொடுத்தேன். திருச்சிக்கு சென்று லோன் ஃபார்மில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தோம். மேலும், லோன் வர தாமதம் ஆவதால் வீடு கட்டும் செலவிற்காக ரூ.10 லட்சம் கொடுங்கள். லோன் வந்ததும் மொத்தமாக 15 லட்சத்தை நாங்கள் கட்டிக்கொள்கிறோம். பிறகு 10 லட்ச ரூபாய்க்கு மட்டும் நீங்கள் வட்டி கட்டினால் போதும்’ என்றனர். அதனை நம்பி ரூ.10 லட்சம் கொடுத்தேன். இப்போது வரை வீடு வரவில்லை. மாறாக, ரூ.32 லட்சம் ரூபாய் வீட்டு லோன் எடுத்ததாக எனக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வருகிறது. அதனை எடுத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்றால், ’ஒரு வருடத்திற்கு முன்னால் நீங்கள் கையெழுத்து போதே உங்களது அக்கவுண்டில் பணம் ஏற்றப்பட்டுவிட்டது’ என்றனர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சம்மந்தப்பட்ட கற்பகம், விவாஹரிடம் கேட்டேன். கூலிப்படையை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டினர். என்னைப் போல தேனியில் சுமார் 25 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளோம். பல லட்ச ரூபாய்களை மோசடி செய்திருக்கிறார்கள். அனைவரும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் புகார் தெரிவித்திருக்கிறோம். ஆனால், இப்போது வரை எந்த பயனும் இல்லை” என்றார் கண்ணீரோடு. குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் இவ்விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை விட, புதிய கலெக்டர் பல்லவி பல்தேவ் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புதான் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளது.