`மதுவை சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரித்து வருகின்றனர்' - நீதி கேட்கும் பழங்குடியினர்

கேரளாவில் படுகொலை செய்யப்பட்ட மதுமீது சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம், அட்டப்பாடியைச் சேர்ந்தவர் மது. பெரும்பாலும் வனத்தில் மட்டுமே வலம் வரும் வனமகன். வனப்பகுதியில் உள்ள குகைதான் வீடு. அங்கு கிடைப்பதைச் சாப்பிடுவார். எதுவும் கிடைக்காவிடின் அருகில் உள்ள முக்காலிக்குச் செல்வார். அப்படி பசிக்காகச் சென்றவர் மீதுதான், திருட்டுப் பழியைப்போட்டுக் கொன்றுள்ளனர் கடவுளின் தேசத்து அரக்கர்கள். மதுவின் படுகொலை அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை முக்காலி கிராம மக்கள்.

மது

ஆனால், மதுவை ஒரு கூட்டம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மது கொலைச் சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, பழங்குடி மக்கள்மீது மாற்று சமூகத்தினர் செலுத்தும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான் மதுவின் கொலை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனிடையே, சிலர் மதுவை சமூக வலைதளங்களில் தவறாகச் சித்திரித்து வருகின்றனர். குறிப்பாக, "மது திருடன். திருடுவதற்காகத்தான் அவர் ஊருக்குள் வருவார். பெண்கள் குளிப்பதையும் எட்டிப்பார்ப்பார். அவரைப் பிடிப்பதற்கான சந்தப்பர்த்தைத்தான் போலீஸார் எதிர்நோக்கியிருந்தனர். அதன் அடிப்படையில்தான் போலீஸார் மதுவைப் பிடித்தனர். போலீஸார்தான் மதுவை அடித்துக் கொன்றுள்ளனர். வேறு யாரும் அடிக்கவில்லை" என்று விமர்சித்து வருகின்றனர். அதேபோல, மது திருடுவதுபோல் போலியான போட்டோ மற்றும் வீடியோக்களையும் அவர்கள் உருவாக்கி வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மது

இதுகுறித்து அங்குள்ள பழங்குடி சங்கத்தினர் சிலரிடம் பேசினோம், "கைது செய்யப்பட்ட நாட்டுக்காரர்களின் (பழங்குடி அல்லாதோர்) சகாக்கள்தான் இதுபோன்ற பதிவுகளைப் போடுகின்றனர். இதற்காக, ஒட்டுமொத்த பழங்குடி மக்களையே தவறாகப் பேசிவருகிறார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரையும் எதிர்க்கவில்லை. மதுவின் படுகொலைக்கு நீதி கேட்கிறோம் அவ்வளவுதான்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!