வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (02/03/2018)

கடைசி தொடர்பு:11:43 (02/03/2018)

`தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்’ - வலுக்கும் புதிய கோரிக்கை

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

மதிய உணவுத்  திட்டம்

தமிழக அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் தொடந்து 5 நாள்களும் கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கலவை சாதங்கள் பிடிக்கவில்லை. அதனால் 90 விழுக்காடு மாணவர்கள் கலவை சாதத்தை உட்கொள்ளாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது. அதனால் தமிழக அரசு இதை ஆய்வு மேற்கொண்டு, அரசு மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்கிறார்கள் தமிழ் சமூக கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி தமிழ்ச் சமூக கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பாய கூறுகையில், ``2015-க்கு முன்பு தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் வெள்ளை சாதம், காய்கறி, பருப்பு சாம்பாரோடு, முட்டை சேர்த்து மதிய உணவாக வழங்கப்பட்டு வந்தது. இதைச் சுவையாகச் சமைத்துக் கொடுக்கும்போது மாணவர்கள் நன்றாகச் சாப்பிட்டு வந்தார்கள். அதன்பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்தோடு சத்துணவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று 2016-க்குப் பிறகு, அரசுப் பள்ளி செயல்படும் 5 நாள்களும் மதியம் கலவை சாதங்கள் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதியம் புளி சாதம், எலுமிச்சைச் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், பிஸ்பேலா பாத் போன்ற கலவை சாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை எவ்வளவு சுவையாகக் கொடுத்தாலும் கிராமப்புற மாணவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை. காரணம் நம்முடைய தமிழர் நிலத்தின் தட்பவெட்ப நிலையிலும் கலாசார பண்பாட்டாலும் வறட்சியான கலவை உணவுகளைப் பெரும்பாலும் விரும்பி உட்கொள்ள மாட்டோம்.

அதேபோல அரசுப் பள்ளியில் மதியம் வழங்கப்படும் கலவை சாதங்களைக் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரும்பாலும் சாப்பிடாமல் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதுதொடர்பாக 7 பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் விசாரித்தபோது, மதியம் வெள்ளை சாதத்தோடு, சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சாப்பிடுவதையே விரும்புவதாக 90 விழுக்காடு மாணவர்கள் தெரிவித்தார்கள். இது சத்துணவு அமைப்பாளர்களுக்கும் தெரியும். அரிசி செலவு குறைவதால், இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை. அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தால், மாணவர்களுக்கு சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதனால் தமிழக அரசு இதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி மதிய உணவு திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.