`சீட்ல இருக்கணும்னா நான் சொல்றதைக் கேளுங்க!' - கிருஷ்ணகிரி கலெக்டரை மிரட்டிய அமைச்சர்

தமிழ்நாடு வருவாய்த்துறை அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2-ம் தேதி மாலை 5.45 மணிக்கு தங்களின் இரண்டு முக்கியமான பிரச்னைகளை முன்வைத்துக் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தொடர் நெருக்கடி மற்றும் மிரட்டலால் கண்டன ஆர்ப்பாட்டத்தை அரசு ஊழியர்கள் சங்கம் கைவிட்டுள்ளது. 

 அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி- கலெக்டர் கதிரவன்

என்ன பிரச்னை என விசாரித்தபோது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பி.என்.ரகுகுமார், மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்களை மாதா மாதம் மாமூல் ரூ.15,000 கொடுக்க வேண்டும் என்றும், பெண் ஊழியர்களைத் தவறான நோக்கத்துடன் இரவு 7 மணிக்கு மேல் அரசு கோப்புகளை எடுத்துக்கொண்டு தனியாகத் தனது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மிரட்டுவதைக் கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் உரிமையிலும் நிர்வாகத்திலும் தலையீடு செய்து மிரட்டும் அரசியல்வாதிகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்தனர். 

இது குறித்து வருவாய்த்துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் பேசினோம். ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றுவதில் சில நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். அதன்படி மாவட்ட ஆட்சியர் சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வட்டாட்சியரை நியமனம் செய்து வருகிறார். அப்படி நியமனம் செய்யப்பட்ட அதிகாரி ஒரு வருடத்துக்கு மட்டுமே வட்டாட்சியராகப் பணியாற்ற முடியும். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் காலியாக இருந்த வட்டாட்சியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்தார் மாவட்டக் கலெக்டர் கதிரவன்.

மிரட்டல் கண்டன ஆர்பாட்டம்

இதில் கடந்த வருடம் போச்சம்பள்ளியில் வட்டாட்சியராகப் பணியாற்றிய பண்டரிநாதன் தன் உடல்நிலையைக் காரணம்காட்டி போச்சம்பள்ளி வட்டாட்சியர் பொறுப்பைப் பாதியில் விடுவித்துக்கொண்டு அமைதியாகக் காத்திருந்து, சரியாக ஓசூர் வட்டாட்சியர் பணியிடம் காலியானதும் பண்டரிநாதனுக்கு மீண்டும் ஓசூர் வட்டாட்சியராகப் பணி வழங்கப்பட்டது. இது முன்னுரிமை அடிப்படையில் மற்றோர் ஊழியர் பாதிப்படைந்தார். எனவே, வட்டாட்சியர் பணி நியமனத்தில் மாவட்டத்தில் பின்பற்றி வரும் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் சங்கத்தின் சார்பாகப் புகார் அளித்தோம். ஆனால், கலெக்டரிடம் முறையான பதில் ஏதுமில்லை. 

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோதுதான் கலெக்டர் மிரட்டப்பட்டுள்ள தகவல் எங்களுக்குத் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, தனக்கு ஆதரவாகச் செயல்படும் பண்டரிநாதனை ஓசூர் நகரத்துக்கு வட்டாட்சியராகப் பணி நியமனம் செய்ய வேண்டும்; இல்லையென்றால் நீங்க இந்தச் சீட்டில் இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார். கலெக்டரும் வேறு வழியில்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பின்பற்றி வரும் நடைமுறையை மீறி பண்டரிநாதனைப் பணி நியமனம் செய்துள்ளார். 

அரசு ஊழியர்கள் தங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்க ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். ஆனால், போராட்டத்துக்கு அமைச்சர் தரப்பிலிருந்து நெருக்கடி வருவதால் இன்று மாலை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தற்காலிகமாக அரசு ஊழியர்கள் கைவிட்டுள்ளனர்'' என்றனர்.

இது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடம் பேசியபோது, ``பண்டரிநாதன் போச்சம்பள்ளியில் ஒரு வருடம் முழுமையாக வட்டாட்சியராகப் பணி செய்யவில்லை. அவருக்கான சர்வீஸ் மீதம் இருந்தது. அதனால்தான் ஓசூர் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக நான் கலெக்டரை மிரட்ட வேண்டிய அவசியம் எனக்கில்ல'' என்று மறுத்தார்.

கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவனிடம் பேசியபோது, ``வட்டாட்சியர் நியமனம் செய்வது மாவட்ட ஆட்சியர் அதிகாரத்துக்கு உட்பட்டது.  உள்ளூர் நிர்வாகப் பணிகளுக்காக அவரை நியமனம் செய்துள்ளோம்" என்று கூறினார். இதற்காக அமைச்சர் மிரட்டியதாக வருவாய்த்துறை சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்களே’ என்று கேட்டபோது, இதை நீங்கள் வருவாய்த்துறை சங்க நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!