சிரியாவுக்காகக் களத்தில் இறங்கும் தமிழர்கள்...! தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை!!

சிரியா

போர் என்ற பெயரால் சிரியாவில் நடந்துவரும் கொடூரத்தின் உச்சத்தை தற்போதுதான் பல்வேறு நாடுகளும் தங்களின் கடைக்கண்ணால் பார்க்கத் தொடங்கியுள்ளன.

சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள்தான் மற்ற நாடுகளை சிரியாவின் பக்கம் திருப்பியது. இதையடுத்து 'கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் ஐந்து மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவு தோல்வியிலேயே முடிந்துள்ளது. வெடிகுண்டுகளால் காயமடைந்த குழந்தைகளின் படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதுடன், அவற்றைப் பார்க்கும் மக்களை ரத்தக்கண்ணீர் வடிக்கச் செய்து வருகிறது. 

எனவே, 'சிரியாவில் எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்படாதா?' என்று மனிதம் போற்றும் மக்கள் பிரார்த்தனை செய்துவருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகப் போருக்கு எதிரான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். மேலும் கூகுள் தேடுதல் இணையதளத்தில் சிரியா பற்றி அதிகமாகத் தேடியவர்களும் தமிழர்கள்தான். குறிப்பாக #SaveSyria என்ற ஹேஷ்டேக் வாரத்தைதான் அதிகமாக கூகுள் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் சிரியாவில் போரினால் தவிக்கும் மக்களை எந்த வகையிலாவது காப்பாற்ற, அங்கு முற்றிலுமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடாதா என்ற எண்ணம்தான். "அது மட்டும் போதுமா? நமது கண்டனத்தை சிரியாவில் நடைபெறும் போருக்கு எதிராக அதிகளவில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மக்கள் களத்தில் இறங்க வேண்டும்" என்ற நோக்கில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள 'அமெரிக்கத் துணைத் தூதரகம்', 'ரஷ்ய துணைத் தூதரகம்' மற்றும் 'ஐ.நா. சபையின் சென்னைக் கிளை' அலுவலக அதிகாரிகளை நேரில் சந்தித்துப் போருக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்தனர்.

சிரியா

பிப்ரவரி 27-ம் தேதியன்று ரஷ்ய துணைத் தூதரகம், பிப்ரவரி 28 அன்று அமெரிக்க துணைத் தூதரகம், மார்ச் 1-ல் ஐ.நா-வின் சென்னைக் கிளை அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர். ஜல்லிக்கட்டு, மீத்தேன் பிரச்னை, விவசாயப் பிரச்னை, நீட் தேர்வு, நதிநீர் பிரச்னை எனத் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து, பல்வேறு தருணங்களில் போலீஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றதால் இவர்களை 'சமூக விரோதிகள்' என போலீஸார் முத்திரை குத்தியதுடன், அது தொடர்பான வழக்குகளையும் இவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சிரியா போருக்கு எதிராக வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தது குறித்து அந்த இளைஞர்களிடம் பேசினோம். "சிரியாவில் தற்போது நடைபெறும் போரானது, பல்வேறு நாடுகளால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இந்தப் போரில் அப்பாவி மக்களும், ஏதுமறியா பச்சிளம் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகிறார்கள். அந்த மக்கள் கேட்பது பணமோ, ஆடம்பர வாழ்க்கையோ அல்ல. நிம்மதியான, அமைதியான வாழ்க்கை மட்டும்தான். அவர்களுக்கு அதுபோன்ற வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால், சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதற்கு சிரியாவில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்திவரும் நாடுகள் முதலில் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். சிரியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு இனம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இப்பிரச்னையை அணுக வேண்டும். ஈழத்தில் நம் கண் முன்னே தமிழர் இனம் அழிந்தபோது, நமக்காகக் குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் இலங்கையில் ஓர் இனமே சின்னாபின்னமாகிவிட்டது. அதன் வலி மற்றவர்களைவிட நமக்குத்தான் அதிகமாகத் தெரியும். தற்போது, அதுபோன்ற வலியைத்தான் சிரியா மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

சிரியா

அங்குள்ள பொதுமக்களும், ஒன்றுமறியா குழந்தைகளும் சிரியாவில் பிறந்ததைத் தவிர, வேறென்ன பாவம் செய்தார்கள்? மற்ற நாடுகள் வேண்டுமானால், இத்தாக்குதலைக் கண்டும், காணாமலும் போகலாம். ஆனால், 'இந்த நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தமிழர்கள் இருக்கிறார்கள்' என்று சிரியாவை நாசப்படுத்திவரும் நாடுகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் எந்தவொரு இனத்துக்கு இன்னல் நேர்ந்தாலும் தமிழினம் கண்ணீர் வடிக்கும்; அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் என்று உலக நாடுகளுக்குப் புரிய வைப்போம். சிரியாவில் நடக்கும் நாடு பிடிக்கும் சண்டையை உலக நாடுகள் தட்டிக்கேட்க வேண்டும். அப்போதாவது, சிரியா மக்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும். இதனை சமூக வலைதளங்களினால் மட்டும் செய்துவிட முடியாது. சிரியா மக்களுக்காகக் குரல்கொடுக்க அனைவரும் வீதிக்கு வர வேண்டும். அதன் முதற்கட்டமாகவே சென்னையில் ரஷ்யா, அமெரிக்காவின் துணைத் தூதரகங்களையும், ஐ.நா. அலுவலகக் கிளைகளையும் அணுகி அங்குள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து, எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டி மனுவையும் கொடுத்தோம். 

எங்கள் கோரிக்கைக்குப் பதில் அளித்த ரஷ்ய துணைத் தூதரக அதிகாரி, 'சிரியாவில் எப்போதோ நாங்கள் போர் நிறுத்த நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். அதன் அடிப்படையில், நாங்கள் போரில் ஈடுபடவில்லை. ஆனால், நடக்கும் தொடர் தாக்குதல்களை நாங்கள்தான் நடத்துகிறோம் என்று மேற்கத்திய நாடுகள் எங்கள் மீது பழி சுமத்தி வருகின்றன. சிரியாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகின்றோம்' என்றார். ஆனால், அமெரிக்க துணைத் தூதரகத்திலும், ஐ.நா. அலுவலகத்திலும் அதிகாரிகள் எங்களின் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு எங்களை அனுப்பி வைத்துவிட்டனர்.  எனவே, தமிழர்களாகிய நாம் அனைவரும் சிரியா போருக்கு எதிராக  ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிக் குரல் கொடுப்போம் என இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.

உண்மைதான்... உலகில் எந்த இனத்துக்குப் பிரச்னை என்றாலும் முதலில் கண்ணீர் வடிப்பதும், குரல் கொடுப்பதும் தமிழினமாகத்தான் இருக்கிறது. நமது இந்த எதிர்ப்பை மற்ற நாடுகளுக்கு நாம் புரியவைக்க வேண்டுமானால், தற்போது சிரியா போருக்கு எதிராக அனைவரும் இணைந்து ஓங்கிக் குரல் கொடுப்போம். உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்ப நம்மால் இயன்ற சிறு முயற்சியையாவது முன்னெடுப்போம்.... #SaveSyria

Do you like the story?

Please Appreciate the Author by clapping!