வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (02/03/2018)

கடைசி தொடர்பு:14:04 (02/03/2018)

`4,100 கோடியில் 1,500 கோடி ஊழல்!' - எடப்பாடி பழனிசாமிமீது ஊழல் பட்டியல் வாசிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர் தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர். 'சம்பந்திக்கும் உறவினர்களுக்கும் நெடுஞ்சாலைப் பணிகளை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்காக என்னைக் கைது செய்ய ஏழு சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளனர். சட்டரீதியாவே அனைத்தையும் எதிர்கொள்வேன்' எனக் கொந்தளிக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். 

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் தங்க.தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும். 'எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்து வருகின்றன. தன்னுடைய சம்பந்தி, உறவினர்களுக்கு 4,100 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை ஒதுக்கியிருக்கிறார் முதல்வர். இந்த விவகாரத்தில் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் பணிகள் அனைத்தும் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கே வழங்கப்படுகின்றன' என இருவரும் குற்றம் சாட்டினர். இந்தச் சந்திப்பையடுத்து, கோட்டை காவல்நிலையத்தில் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதியை மீறிச் சென்றது; அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறீர்கள். அப்படியென்ன ஊழல் நடந்துவிட்டது? 

"நெடுஞ்சாலைத்துறையில் ரு. 4,100 கோடிக்கு டெண்டர்களை அறிவித்துள்ளனர். இவை அனைத்துமே சிங்கிள் டெண்டராக முதலமைச்சரின் சம்பந்தி, உறவினர்கள், அவர்களது கம்பெனி பங்குதாரர் ஆகியோருக்குக் கொடுத்துள்ளனர். அனைத்தும் சாலை போடுவது தொடர்பானது. வேலைகளைத் தொடங்குமாறு உத்தரவும் வழங்கிவிட்டனர். இதைப் பற்றிய விரிவான தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதைப் பற்றி ஊடகங்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். 'நாங்கள் கொடுத்த தகவல் தவறாக இருந்தால், எங்கள்மீது நடவடிக்கை எடுங்கள். இந்தத் தகவல் சரியாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள்' என்று சொன்னோம்." 

நீங்கள் சொல்லும் 4,100 கோடி ரூபாயும் ஊழல் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

"4,100 கோடிக்கு விடப்பட்ட டெண்டரில் 1,500 கோடி ரூபாய் வரையில் கூடுதலாகப் பணத்தை எடுத்திருக்கிறார்கள்." 

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத்துறையைக் கையில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போதுதான் ஊழல் நடக்கிறதா? 

"பொதுவாக, அரசு ஒப்பந்தப் பணிகளை முறையாக அறிவித்து வழங்குவது என்பது வேறு. முதல்வருடைய சம்பந்தி, மகன், பார்ட்னருக்கு வேலை போகிறது என்றால், இதை எப்படி எடுத்துக்கொள்வது. அவருடைய குடும்பத்துக்குள்ளேயே சிங்கிள் டெண்டராகப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக, டெண்டரை அறிவித்தால் 10 கம்பெனிகள் போட்டிப்போடும். இதில் எப்படி சிங்கிள் டெண்டராக வழங்க முடியும்?" 

நெடுஞ்சாலைத்துறை ஊழல்

கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக, உங்கள்மீது புகார் பதிவாகியிருக்கிறதே? 

"6 மணிக்கு மேல் எந்த அரசு அதிகாரி வேலை பார்த்திருக்கிறார்? 5.30 மணியோடு அவர்களுக்கு வேலை முடிந்துவிடும். சட்டமன்ற வளாகத்தில் பேட்டி கொடுப்பது என்பது வழக்கமான ஒன்று. அப்படியெல்லாம் பேட்டி கொடுக்க முடியாது என ஏன் சொல்கிறார்கள்? நாங்கள் இருவரும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள். தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்துக்கு வெளியில் பேட்டி கொடுத்தோம். இதற்காக, வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் மீதான ஊழல்கள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற அச்சம்தான் காரணம். ஏழு சிறப்பு டீம் போட்டு என்னைக் கைது செய்யத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 'தாராளமாக எதிர்கொள்ளத் தயார்' என அவர்களிடம் கூறிவிட்டேன்". 

முதல்வர் தரப்பில், `தினகரன் மட்டும்தான் எதிரி' என்கின்றனர். அமைச்சர் வேலுமணி பேசும்போது, 'தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்க இருந்தோம்' என்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ஊழல்களை வெளிப்படுத்துவது எதைக் காட்டுகிறது? 

"நாங்கள் அவர்கள் பக்கம் எப்படிப் போக முடியும். இப்படியொரு பேச்சு எதற்காக வந்தது என்றே தெரியவில்லை. சின்னம்மா, டி.டி.வி-யால்தான் இவர்களுக்குப் பதவி கிடைத்தது. 'இவர்கள் இருவருமே வேண்டாம்' என அவர்கள் கூறிவிட்டனர். அம்மாவுடன் இருந்ததற்காக, சின்னம்மாவுடன் நாங்கள் இருக்கிறோம். சின்னம்மா, டி.டி.வி.தினகரன் இருவரையும் தொண்டர்களும் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டார்கள். கட்சியை வழிநடத்தக்கூடிய தகுதி இவர்களுக்குத்தான் உள்ளது. இதைப் புரிந்துகொண்டு அவர்கள் வந்துவிட்டால் நல்லது." 

முதல்வர் துறைமீது மட்டும்தான் ஊழலா... மற்ற அமைச்சர்கள் மீதும் புகார் வந்திருக்கிறதா? 

"முதலமைச்சர்மீது முதல்கட்டமாகப் புகார் கூறியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறைப் பணிகளை யாருக்கெல்லாம் முதல்வர் வழங்கியிருக்கிறார் என இணையதளத்தில் சென்று பாருங்கள். அத்தனை விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. வரக்கூடிய நாள்களில் ஒவ்வொரு ஊழல்களாக வெளியில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்." 


டிரெண்டிங் @ விகடன்