ரூ.6 கோடி செம்மரக்கட்டைகளுக்கு பதில் வைக்கோல்! அதிகாரிகளைப் பதறவைத்த கன்டெய்னர்

தூத்துக்குடியில் சுங்கத்துறையின் பாதுகாப்பில் கன்டெய்னரின் சீல் இடப்பட்டு வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான 15 டன் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு, அதற்கு பதிலாக வைக்கோல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கண்டெய்னர்- செம்மரக்கட்டை

பெங்களூருவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்குக் கடந்த 2013 ம் ஆண்டு கடத்தவிருந்த 15 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் செம்மரக்கட்டைகளை கன்டெய்னரில் அடுக்கி, சீல் வைத்து தூத்துக்குடியில் சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் டெர்மினலில் பாதுகாப்பாக வைத்தனர். கடந்த 2014, மே மாதம், மதுரை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இதனை ஆய்வு செய்தபின், மீண்டும் சீல் இடப்பட்டு வழக்கு எண்ணும் முத்திரையாகப் பதிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு மதுரைக் கிளையில் முடிவடைந்த நிலையில், செம்மரக்கட்டைகளை  ஏலம்விட உத்தரவிட்ட நிலையில், சுங்க மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கன்டெய்னர் டெர்மினலில் உள்ள கன்டெய்னரைத் திறக்க முயன்றனர். அதில் சுங்கத்துறை சீலுக்குப் பதிலாக வேறு எண்ணுடன் வேறு நிறத்தினாலான சீல் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதனுள் வைக்கோலும், மரத்தூளும் இருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

 இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “ செம்மரக்கட்டைகள் வைக்கப்பட்ட கன்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகளால்  வைத்திருந்த சீலை அகற்றிவிட்டு, செம்மரக்கட்டைகளைக் கடத்திய பின், வேறு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட, உடைந்த சீலை ஒட்ட வைத்துள்ளனர். கடத்தப்பட்ட 15 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2014 ஜூன் முதல் 2017 டிசம்பர் வரையில்தான் செம்மரக்கட்டைகளின் கடத்தல்கள் தொடர்ந்து நடந்தன. இந்த நேரத்தில்தான் கடத்தியிருக்க முடியும். சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை நிறுத்திய பிறகுதான் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் வேலை நேரம் குறைவான நாள்களிலோ அல்லது விடுமுறை நாள்களில் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். இது குறித்து இந்தக் கன்டெய்னர் டெர்மினலில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

இதையடுத்து, சுங்கத்துறையின் அங்கீகாரம் பெற்று சரக்குகள் பரிவர்த்தனை செய்வதற்காகக் கன்டெய்னர் டெர்மினல் அங்கீகாரத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இதேபோல, பல வழக்குகளில் தொடர்புடைய பொருள்களையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி வருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!