`விராட் கோலி, எங்களுக்காக இதைச் செய்யுங்கள்!’ - பாகிஸ்தான் ரசிகர்களின் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

விராட் கோலி

photo credit: twitter/@Saj_PakPassion

கேப்டனாக கோலி பதவியேற்றது முதல் இந்திய கிரிக்கெட் அணி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அசாருதீன், டெண்டுல்கர், கங்குலி, தோனி என மற்ற கேப்டன்களால் முடியாததை கோலி முடித்துக் காட்டியுள்ளார். ஆம், தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை தொடரைக் கைப்பற்றியதில்லை என்கிற வரலாற்றை உடைத்து கோலி தலைமையிலான படை சாதித்துள்ளது. மேலும், டெஸ்ட் ரேங்கில் நம்பர் ஒன் அந்தஸ்து, ஒரு நாள் போட்டிகளில் தொடர் வெற்றி எனப் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதேபோல் பேட்டிங்கிலும் அவர் கலக்கி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக பாகிஸ்தானில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஐ.பி.எல்-க்குப் போட்டியாக பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் ப்ரீமியர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐ.பி.எல்-க்குக் கிடைத்த வரவேற்பு பி.எஸ்.எல்-க்குக் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டியை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியின் போது, கோலியின் ரசிகர்கள், "பி.எஸ்.எல் போட்டியில் கோலி விளையாட வேண்டும்" எனப் பதாகைகள் ஏந்தியபடி கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!