வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (02/03/2018)

கடைசி தொடர்பு:17:45 (02/03/2018)

தூத்துக்குடியில் வான், கடல், நில சாகசத்தில் அசத்தும் வீரர்கள்!

தூத்துக்குடி மாவட்ட நலக்குழு மற்றும் ஸ்பிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வான், கடல், நில சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையில் இந்தப் போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

சாகச வீரர்கள்

 

தூத்துக்குடி துறைமுகக் கடற்கரையில் இந்த சாகச விளையாட்டுகளைத் தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “கோவையில் உள்ள வான் விளையாட்டு அறிவியில் மையம், பாரா சைலிங், பாரா கிளைடிங், கேங் கிளிடிங், பவர் ஹேங் கிளைடிங், போன்ற வான் சாகச விளையாட்டுகளை நடத்தி வருகிறது. அரசின் பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளிலும் இந்த வான் விளையாட்டு அறிவியல் மையம் கலந்துகொண்டு இவ்விளையாட்டின் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

சாகச வீரர்கள்

அதன் அடிப்படையில் வான், கடல், நில சாகச விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக பாரா சைலிங், அக்குவா சைலிங், சோர்பிங், கமண்டோநெட், ரைவர் கிராசிங் ஆகிய சாகச விளையாட்டுப் போட்டிகள்  தூத்துக்குடி துறைமுகக் கடற்கரை மற்றும் மணப்பாடு கடற்கரை ஆகிய 2 இடங்களில் 3 நாள்கள் நடைபெறுகின்றன.

இந்தியாவில் ஒரே நேரத்தில் ஒரே விதமான பல கடல் சாகச விளையாட்டுகளை நடத்தும் இயற்கை அமைப்பைக்கொண்ட ஒரே கடல் பகுதி மணப்பாடு கடற்கரைதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா மேம்பாட்டுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். அதேபோல தூத்துக்குடி முயல் தீவு கடற்கரைப் பகுதியை மேம்படுத்தி அதில் படகு சவாரி அமைப்பதற்கு சுற்றுலாத்துறை மூலம் மானியக் கோரிக்கையில் தெரிவிக்க இருக்கிறோம்” என்றார்.    

சாகச வீரர்கள்

இந்த சாகச விளையாட்டுகள் இன்று தொடங்கி வரும் 4-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும். இந்த நாள்களில் காலை 8 மணிக்குத் தொடங்கி 11 மணி வரையிலும் மாலை 4 மணிக்குத் தொடங்கி மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளவும் பார்வையிடவும் கட்டணம் ஏதும் கிடையாது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் பெயர், முகவரியைப் பதிவு செய்துவிட்டு, மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், உரிய பாதுகாப்பு சாதனங்கள் அணிந்த பின்னரே விளையாட்டில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க