கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த பொறியாளர்கள்!

வேலை பொறியாளர்கள்

Representational Image

பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதுமான கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, முதுநிலை படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.

‘கால் காசு சம்பளம்னாலும் கவர்மென்ட் சம்பளம்‘ இப்படிப் பேசும் மனநிலை இன்னமும் நம்மை விட்டு நீங்கவில்லை. திறமைக்கு ஏற்ப ஊதியம் கொடுக்க, ஏராளமான தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. வேலையில்லை என்பதைவிட வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதே தமிழகத்தின் யதார்த்த நிலை. ஆனால், இதில் பொறியியல் பட்டதாரிகள் விதிவிலக்கு. தேவைக்கு அதிகமாக உள்ள கல்லூரிகளிலிருந்து ஆண்டுதோறும் வெளியேறும் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. பொறியியல் கல்லூரிகளை முறைப்படுத்தாத வரை, வேலையில்லாப் பட்டதாரிகள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். இவர்களின் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காத நிலையில், எந்த வேலை கிடைத்தாலும் சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் இந்த விஐபி (வேலையில்லா பட்டதாரி) கள். அதனால்தான், சில நூறு காலியிடங்கள் மட்டுமே உள்ள அரசுப் பணிக்காக பல லட்சம் பேர் விண்ணப்பம் செய்கிறார்கள். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி போதுமான பணிக்கு, முதுநிலைப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, 66 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அளிக்க அறிவிப்பு செய்தார்கள். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி என்றால் என்ன தெரியுமா? சிகிச்சைக்காக வரும் ஆடு, மாடுகளைப் பிடித்துக் கட்டுதல், மருத்துவர் சிகிச்சை செய்யும்போது அவருக்குத் தேவைப்படும் கருவிகள், மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொடுப்பது, மாடுகள் போடும் சாணத்தை அள்ளி அப்புறப்படுத்துவது போன்றவை கால்நடை பராமரிப்பு உதவியாளருக்கான பணிகள். 18 வயது பூர்த்தியான பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக 7 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலும் பட்டதாரிகள். அதுவும், பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளார்கள். எம்.இ முடித்தவர்கள், முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பான பிஹெச்.டி முடித்தவர்களும் விண்ணப்பித்துள்ளது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''படித்தவர்களுக்கு பல இடங்களில் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் இதுபோன்ற பணிகளுக்கு மட்டுமே செல்ல முடியும். எப்போதோ கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகளையும் படித்தவர்கள் பயன்படுத்திக்கொள்வதால், தங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகிறது'' என குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலையின்மை பிரச்னையையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தாங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத நிலையில், சாணி அள்ளும் வேலை பார்க்கவும் தாங்கள் தயார் என்கிற பொறியியல் பட்டதாரிகளின் மனநிலையையே இது காட்டுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!