22 துறை அதிகாரிகளுடன் மது வீட்டுக்குச் சென்ற பினராயி விஜயன்; குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதி

கேரள மாநிலம் அட்டப்பாடியில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் வீட்டுக்கு இன்று வருகை தந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். 

மது

மதுவின் தாயார் மல்லிகா, சகோதரி சந்திரிகாவிடம், `குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் உறுதியளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ''மது குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பகுதியில் மனநலம் பாதித்தவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பராமரிக்கும் விதத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும். பிராந்தி அருந்துவதும் பெரும் பிரச்னை. பிராந்திக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும். ரேஷன் அரிசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் பழங்குடியின மக்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

மது- பினராயி விஜயன்

காலை 10.20 -க்கு மது வீட்டுக்கு வந்த பினராயி விஜயன் 15 நிமிடங்கள் அங்கே இருந்தார். முதல்வர் பினராயி விஜயனுடன் 22 துறை அதிகாரிகள் அட்டப்பாடிக்கு வந்திருந்தனர். இதற்கிடையே, மது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்புவதாகப் பழங்குடி  அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இதையடுத்து, மதுவின் தாய்மாமா ராஜேஷ், மாத்ரூபூமி பத்திரிகை அலுவலகத்துக்கு அவர்  நல்ல நிலையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். புகைப்படத்தில் சகோதரி சந்திரிகா மற்றும் இரு குழந்தைகளுடன்‘ ஆரஞ்சு வர்ண டி-சர்ட் அணிந்தவாறு மது உள்ளார். விபத்தில் சிக்கியதால், மனநிலை பாதித்துள்ளது. தொடர்ந்து, கிடைப்பதை உண்டு வாழத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 22-ம் தேதி அடித்துக் கொலைசெய்யப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!