பூம்புகாரில் சப்தகன்னியர்களுக்கு பொங்கல் படையலுடன் மாசி மகத் திருவிழா! | Fishermen Festival in Poompuhar

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (02/03/2018)

பூம்புகாரில் சப்தகன்னியர்களுக்கு பொங்கல் படையலுடன் மாசி மகத் திருவிழா!

 மாசி மகத் திருவிழாவையொட்டி,பௌர்ணமி நாளான நேற்று (1-ம் தேதி),  தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். 
நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில், மாசி மகத்தை முன்னிட்டு  மாலை 6 மணிக்கு மீனவர்கள் கடற்கரையில் சப்தகன்னியர்களுக்கு படையலிட்டு வழிபாடுசெய்தனர்.

மீனவர் திருவிழா


பூம்புகாரில், கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூஜைகள் செய்து, அங்கு அமைந்திருக்கும் சப்தகன்னியர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதன்பிறகு, கடற்கரை ஓரத்தில் இருந்த சப்தகன்னியர்களுக்கு பொங்கலிட்டுப் படைத்தனர். சப்தகன்னியர்கள், இந்திரனின் சபையில் நடன மங்கையர்களாக இருப்பவர்கள் என்றும், மாசி மக நாளில் மட்டும் பூமிக்கு வந்து கடலில் உலாவுகிறார்கள் என்றும் இங்குள்ள மீனவர்களின் நம்பிக்கை. அதனால், இவர்கள் தங்களின் 'மீன்பிடித் தொழில்' சிறக்கவும், கடலில் மீன் வளம் அதிகரிக்கவும் வேண்டி சப்தகன்னியர்களை வழிபாடுசெய்தனர்.

சப்தகன்னியர்


கடற்கரை மணலில் ஏழு இலைகள் இட்டு, அதில் சர்க்கரைப் பொங்கல், பொரி கடலை, தினை மாவு, வாழைப்பழம், தேங்காய், கரும்பு, இளநீர் ஆகியவற்றை வைத்து  படையலிடுவார்கள். முன்னதாக, படையலிடும் இடத்தை வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் கரும்புகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். இதில், பூம்புகாரைச் சேர்ந்த ஊர்ப் பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்த வழிபாடுபற்றி அவ்வூர் மக்களிடம் கேட்டோம். "முன்னொரு காலத்தில் மாசி மக நாளில்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற எங்களது முன்னோர்கள், கடலில் சப்தகன்னியர் விளையாடுவதைக் கண்டுள்ளனர். அவர்கள், தங்களது மீன்பிடித் தொழில் வளம்பெற கன்னியர்களை வேண்டிக்கொண்டனர். சப்தகன்னியர்களும் அவர்களுக்கு அருள்வதாகக் கூறி மறைந்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான், ஒவ்வோர் ஆண்டும் சப்தகன்னியர்களுக்குக்கு வழிபாடு செய்துவருகிறோம்" என்றனர்.


மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்தப் பூஜை 7.30 மணிவரை நடைபெற்றது. பின்பு, அலங்கரிக்கப்பட்ட புது மண்பானையில் கற்பூரம் ஏற்றப்பட்டு சப்தகன்னியர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.  அடுத்து, அந்த மண்பானையை மிகவும் கவனமாக ஒரு படகில் எடுத்துச் சென்று, கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் விட்டார்கள். அப்போது, மேள தாளங்கள் முழங்க தங்களது தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் கடல் மாதாவை மக்கள் வேண்டிக்கொண்டனர். பிறகு, அந்தப் படகு கரைக்குத் திரும்பி வந்தது.
 கடலில் இவர்கள் விட்டுவிட்டு வரும் மண்பானை, குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கரையை  வந்து அடைந்துவிடும். அப்படி அடைந்து விட்டால், கன்னியர்கள் இவர்களது வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

பூம்புகார் விழா


இந்த விழாவின்போது, பூம்புகார் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டார்கள். இந்த பூஜை முடிந்த பிறகு, இரவில் கடற்கரையில் சப்தகன்னியர்கள் உலவுவார்கள் என்பதும், அப்போது மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என்பதும் மீனவர்களின் நம்பிக்கை. எனவே, இரவிலும்கூட யாரும் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். காலமெல்லம் காத்து நிற்கும் கடல் மாதாவுக்கும் சப்தகன்னியருக்கும் நன்றி கூறும் திருவிழாவாகத்தான் இவ்விழாவை, பூம்புகார்  மீனவர்கள் கொண்டாடுகிறார்கள்.