' இங்கே யார் சீனியர்?' - தாக்குதலில் இறங்கிய பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

பெரியால் பல்கலைக்கழக பேராசிரியர்கள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், படிப்பைத் தவிர மற்ற அனைத்துப் பரபரப்பு சம்பவத்துக்கும் பஞ்சமில்லை என்பதை நிரூபித்தி ருக்கிறது.  பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராக இருப்பவர் குமாரதாஸ். இத்துறையின் பேராசிரியராக இருப்பவர் அன்பரசன். இருவருக்கும் நீண்ட காலமாக நடந்த பனிப்போர் இன்று வெடித்து, ஒருவரை ஒருவர்  கீழ்த்தரமாக அடித்துக்கொண்டனர். பின்னர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒருவர்மீது ஒருவர் புகார் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் படுத்துக்கொண்டனர். இந்தச் சண்டையை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கைகட்டி வேடிக்கைபார்த்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் இயற்பியல் பேராசிரியர் அன்பரசன், ''குமாரதாஸைவிட  நான் 2 ஆண்டுகள் சீனியர். முறையாக இயற்பியல் துறை தலைவர் பதவியை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நான், பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், வேறு சமூகத்தைச்  சேர்ந்த குமாரதாஸூக்குக் கொடுத்தார்கள். முறைப்படி நான், வருகைப் பதிவேட்டில் என்னுடைய பணி மூப்பு எழுதி கையெழுத்துப் போட்டுவந்தேன். நேற்று மாலை, எனக்கு இ.மெயில்மூலம் பணி மூப்பு பற்றி வருகைப் பதிவேட்டில் பதிவிடக் கூடாது. மீறி பதிவிட்டால், துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடிதம் அனுப்பியிருந்தார். அதையடுத்து, இன்று குமாரதாஸ் அறைக்குச் சென்று பல்கலைக்கழக விதிப்படி பணி மூப்பு எழுதி கையெழுத்துப் போடுவதில் என்ன தவறு என்று கேட்டேன். அதற்கு அவர், என்னை ஒருமையில் திட்டினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே குமாரதாஸ், 'என்னை எதிர்த்துப் பேசுறீயா...' என்று ஆக்ரோஷமாக செருப்பைக் கழற்றி என்மீது வீசி அடித்துவிட்டு ஓடிப்போய்  துணைவேந்தர், பதிவாளரிடம் சொல்லிவிட்டு குடுகுடுனு கீழே இறங்கி, முதலாவதாக சூரமங்கலம் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு, அரசு மருத்துவமனையில் படுத்துக்கொண்டார். அதையடுத்து, நானும் சக பேராசிரியர்களிடம் ஆலோசனை செய்து, சூரமங்கலம் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன்'' என்றார்.

இதுபற்றி, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இயற்பியல் துறை தலைவர் குமாரதாஸ், ''முகம், தாடை மற்றும் உடல் பகுதிகளில் பலமான அடி விழுந்துவிட்டதால், இப்போதைக்கு என்னால் எதுவும் பேச முடியாது'' என்றார்.

இதுபற்றி நடுநிலையான பேராசிரியர்களிடம் பேசியதற்கு, ''குமாரதாஸைவிட அன்பரசன் 2 வருடங்கள் சீனியர். முறையாக அன்பரசனுக்கு இயற்பியல் துறை தலைவர் பதவி கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கவில்லை. அன்பரசன் விடைத்தாள் திருத்தி மார்க் போட்டிருந்தார். அதை மீண்டும் குமாரதாஸ் திருத்தினார். இந்த வழக்கு, மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்குச் சென்று விசாரணை நடந்தி, அன்பரசன் பக்கம் சாதகமான முடிவு வந்தது. இதிலிருந்தே இருவருக்கும் பனிப்போர் நடைப்பெற்றுவந்தது. அது இன்று,  பல்கலைக்கழகத்தை வெட்கப்பட வைத்துள்ளது. இதை, துணைவேந்தரும் பதிவாளரும் பார்த்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது'' என்றார்கள்.

இதுபற்றி துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க முற்பட்டோம். ஆனால், இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!