பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு விருந்து வைத்து அசத்திய அரசுப் பள்ளி

ல்யாணம், காதுகுத்து, கெடாவெட்டு என விருந்துவைத்து உறவினர்களை குஷிப்படுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால், அரசுப் பள்ளி ஒன்றில், பொதுத்தேர்வு எழுதப்போகும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த, ஆசிரியர்களும் கிராம மக்களும் சேர்ந்து விருந்துவைத்து, தேர்வுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொடுத்திருப்பது நெகிழவைத்துள்ளது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பல விஷயங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கடந்த வருடம், இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஓய்வு நேரங்களில், சீமைக்கருவேலம் மரச்செடிகளை வேருடன் பிடுங்கிக்கொண்டு, புத்தகப்பையுடன் பள்ளிக்கு வந்தார்கள். அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால் சுமார் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட சீமைக்கருவேலச் செடிகள் அழிக்கப்பட்டன. அத்துடன், விதைப்பந்துகள், மரங்கள் வைக்கப்பட்டன. அதிக கருவேலம் மரங்களை அழித்த மாணவர்களுக்கு  ஊக்கப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

தற்போது, இந்தப் பள்ளியின் 210 மாணவர்கள், பத்தாம் வகுப்பு, ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதப்போகிறார்கள்.  அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், விருந்து படைத்துள்ளனர்.

அரசுப் பள்ளி

இதுகுறித்து தலைமை ஆசிரியர், கிராம மக்களிடம் கூற, அடுத்த சிலதினங்களில், நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்தனர்.

கடந்த 26-ம் தேதி மதியம், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் போன்றவற்றைப் பரிசாக வழங்கிட முடிவெடுத்து வாங்கிவந்தனர். அடுத்து, மாணவர்களுடன் சேர்த்து 300 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அறுசுவையுடன் விருந்து வழங்கினர்.

இந்த விழாவில், மாணவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுடன், பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். விழாகுறித்து பேசிய ஆசிரியர்கள்...

பள்ளி

“சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், பணிமாறுதலில் சென்றார். அப்போது எங்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அதை மாணவர்கள் வேடிக்கை பார்த்தபோதுதான் எங்களுக்குள் இந்த எண்ணம் உருவானது. ஆசிரியர்களான நாம் ஒன்று சேர்ந்து, நமது மாணவர்களுக்கு விருந்து வைப்போம் என முடிவெடுத்தோம். தலைமை ஆசிரியரிடம் கூறினோம். அவரும் ஏற்றுக்கொண்டார். அதேபோல, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இளைஞர்களும் உதவச் சம்மதித்தனர். முதலில், புதிய கல்வி ஆண்டில் நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குப் பரிசும், விருந்துவைக்கலாம் எனப் பேசினோம். நல்ல விஷயத்தை அடுத்த வருடம் எனத் தள்ளிப்போடுவதைவிட, இந்த வருடமே செய்வோம் என முடிவெடுத்தோம். அதன்படி, ஆசிரியர்கள், கிராம மக்கள் என எல்லோரும் இணைந்து நடத்திய நிகழ்வே இது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் 300 பேருக்கு உணவு வழங்கினோம்'' என்றார்கள்.

பள்ளி

விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் சாப்பிட்ட குழந்தைகள், ''சார், நான் ரெண்டு முறை சாப்பிட்டேன், மூன்று முறை ரசம் வாங்கினேன்'' என அவர்கள் மொழியில் சொன்னது, நெகிழச் செய்தது.  பொதுத்தேர்வு என்பதை பயமுறுத்தும் விஷயமாக மாணவர்களுக்குள் திணிக்காமல், இப்படி விருந்து படைத்து உற்சாகப்படுத்தியிருப்பது, மாணவர்களிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!