'ஒரே நிலத்தில் இத்தனை பயிர்களா..!' - தமிழ் மண்ணை வியந்த பிரான்ஸ் மாணவர்கள்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள், 'ராமேஸ்வரம் தீவு கடற்கரைக் கலாசாரத்தில் திளைத்தல்' நிகழ்ச்சியில் பங்கேற்று நெகிழ்ந்தனர்.

மல்லிகை நாற்று விவசாயம் குறித்து அறியும் ஃபிரான்ஸ் மாணவர்கள்

இந்திய மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் வழிகாட்டுதல்களோடு, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தில் அவ்வப்போது கல்வி மற்றும் கலாசாரம்குறித்த பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள 'போர்ஜ்' நகரைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர், ஆசிரியர் இருவருடன் 7 நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். 'ராமேஸ்வரம் தீவு கடற்கரை கலாசாரத்தில் திளைத்தல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணத்துக்கு, பேராசிரியர் அலைன் பெய்ன் தலைமை ஏற்றுள்ளார். 

புவியியல் பாட மாணவர்களான இவர்கள், ராமேஸ்வரம் தீவு மக்களின் வாழ்வியல் மற்றும் தொழில் முறைகள், கலாசாரம், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள்குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, தங்கச்சிமடம், ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் உள்ள மீனவர்கள், மல்லிகை நாற்று உற்பத்தியாளர்களுடன், தென்னை விவசாயிகளோடு இணைந்து, மீன்பிடித் தொழில் மற்றும் விவசாய முறைகள் குறித்து அறிந்துவருகின்றனர். 

இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ள பிரான்ஸ் மாணவி இம்மானுவேல் கூறுகையில், ''எங்கள் நாட்டிலுள்ள விவசாயிகளை   நண்பர்களாகக்கொண்டிருக்கிறேன். அங்கு, திராட்சை விவசாயம் அதிக அளவில் உள்ளது. அதுவும், ஓர் இடத்தில் ஒரே பயிர் விளைவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக, இங்கு ஒரே மண்ணில் தென்னை, மல்லிகை, பப்பாளி, வாழை எனப் பல வகையான பயிர்கள், செடி, மரங்கள் நடப்படுகின்றன. இது மிகுந்த ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் தருகிறது'' என்றார். இந்த கல்விப் பயணத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டி, 'தானம்' அறக்கட்டளை நிர்வாகி ஆசைத்தம்பி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!