'பசுமை ராமேஸ்வரம்' திட்டத்தில் அப்துல் கலாம் நினைவிடம்!

'அப்துல்கலாம் நினைவிடம் அமைந்துள்ள தங்கச்சிமடம் ஊராட்சிப் பகுதியை பசுமை ராமேஸ்வரம்' திட்டத்தில், இணைக்கும் விழா, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

பசுமை ராமேஸ்வரம் திட்டத்தில் அப்துல்கலாம் நினைவிட பகுதி இணைப்பு

புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கிவரும் ராமேஸ்வரத்தை மேம்படுத்த, 'பசுமை ராமேஸ்வரம்' திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்திட்டத்தின்கீழ், ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 4 வரையிலான வார்டுகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளுதல், அப்பகுதிகளில் சேரும் குப்பைகளை வகை பிரித்து மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், தூர்ந்துபோன நீர் நிலைகளான தீர்த்தங்களைத் தூர் வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 
'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' தொண்டு நிறுவனம் மற்றும் பசுமை ராமேஸ்வரம் திட்டக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் இப்பணிகளுக்கு, ஓ.என்.ஜி.சி நிறுவனம் நிதியுதவி அளித்துவருகிறது. தற்போது இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகம் அமைந்துள்ள பஞ்சாயத்துப் பகுதியான தங்கச்சிமடத்தில் உள்ள 4 வார்டு பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கான துவக்க விழா, மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்தது. 'ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா' தொண்டு நிறுவன துணைத் தலைவர் அமுதசேகரன் விளக்க உரை ஆற்றினார். ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் சுபீர் சந்திர காக்டி,மோகன் வர்க்கீஷ் செரியன், பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓ.என்.ஜி.சி சமுதாயப் பணிகள் தலைமை நிர்வாக இயக்குநர் பார்த்திபன், திட்டத்தைத் துவக்கிவைத்தார். முன்னதாக, அப்துல் கலாம் நினைவிடத்தில் தூய்மைப் பணியும், விழிப்புஉணர்வு கையெழுத்து நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!