வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:01:00 (03/03/2018)

போலீஸ் எப்படித் தண்டிக்கலாம்?- என்கவுன்டருக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள் சிவில் உரிமைக் கழகம்

''என்கவுன்டர் படுகொலைகள் இந்தியா முழுவதும் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இப்போக்கு, தமிழகத்திலும் வளர்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டித்துள்ளது.

நீதிமன்றமே தண்டனைகள்

 

நம்மிடம் பேசிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, செயலாளர் இரா.முரளி, '' மதுரையில் மார்ச் முதல் நாளில், கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் சிக்கந்தர் சாவடி குடியிருப்பில் வைத்து என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.  கொல்லப்பட்ட இரண்டு பேரும் ரவுடிகள் எனவும், அவர்கள்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகளுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதைச் செய்யவேண்டியது நீதிமன்றத்தின் பணிதானே தவிர, காவல்துறையின் வேலையல்ல. என்கவுன்டர் படுகொலைகள், இந்தியா முழுவதும் சமீப காலமாக அதிகரித்துவருகின்றன. இப்போக்கு, தமிழகத்திலும் வளர்வதை எங்கள் அமைப்பு கண்டிக்கிறது.

குற்றவாளிகளைச் சுட்டுக் கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எவ்வளவோ மாற்று வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். என்கவுன்டர் படுகொலைகள் பற்றிப் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் இந்தக் கொலைகளைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு, உயர்மட்டக் குழுவின் விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த என்கவுன்டரில், வேறு அரசியல் காரணங்கள் உள்ளதா என்பதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும். என்கவுன்டர் செய்து குற்றவாளிகளைப் பிடிப்பது சரிதான் என்ற மனநிலை சமூகத்தில் நிலவுவது ஆபத்தானது. யாரை வேண்டுமானாலும்,  ரவுடி, கொடிய குற்றவாளி என்று முத்திரை குத்தி என்கவுன்டர் செய்யும் போக்கு உருவாகிவிடும். இது, நாகரிகமான சமுதாயத்திற்கு அழகல்ல. எனவே, இத்தகைய என்கவுன்டர் படுகொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என பி.யூ. சி. எல் வலியுறுத்துகிறது'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க