ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு - 50 ஆண்டு புதிருக்கு விடை

சிலை

தஞ்சாவூர் பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இதனைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையும், அவர் மனைவி லோகமாதேவி சிலையும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கோவிலில் இருந்து திருடு போயுள்ளன. இந்தச் சிலைகள் தற்போது வெளி மாநிலம் ஒன்றில் உள்ள தனியார் அருங்காட்சியத்தில் இருப்பதும்  கண்டுபிடிக்கபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிலை

பெரிய கோவிலை கட்டுவதற்கு மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்ததோடு கோவில் கட்டமைப்பில் தலைமை நிர்வாகியாகவும் செயல்பட்டவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்தன் வேளாண் என்பவர். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூர் அரசனாக இருந்தவர். இவர் ராஜராஜசோழன் நினைவாக 13 பஞ்சலோக திருமேனிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனிடம் கொடுத்திருக்கிறார். அதில் ராஜராஜ சோழன் சிலையும் அவரது மனைவி லோகமாதேவியார் சிலையும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் நூறு கோடி ரூபாய் இருக்கும். இந்தச் சிலைகளை காணவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமி நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தஞ்சை பெரிய கோவிலில் விசாரித்து வந்தனர். அதில் சிலைகள் காணமல் போனது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இந்தச் சிலையில் வெளிமாநிலத்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது.

சிலை

இதுகுறித்து தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார், “ராஜராஜன் சோழன் சிலை கோவில் வளாகத்தில் வடமேற்கு மண்டபத்தில் இருந்துள்ளது. இதற்கான சான்றுகளும், கல்வெட்டு குறிப்புகளும் உள்ளன. பஞ்ச லோகத்திலான ராஜராஜசோழன் சிலை அறுபது கோடி ரூபாயும், லோகமாதேவி சிலை நாற்பது கோடி ரூபாயும் மதிப்பு கொண்டதாக தெரிகிறது. சிலை காணமல் போனது குறித்து முக்கியஸ்தர்கள் சிலர் புகார் தெரிவிததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு பதிவும் செய்யபட்டுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்திருக்கிறோம் அவர்கள் இது குறித்து விசாரணையை தொடர்வார்கள்” என தெரிவித்தார்.

இதுகுறித்து ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், “சிலை காணாமல் போனது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்வதோடு குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!