தூத்துக்குடி மாநகராட்சிக்கு 16 புதிய டிப்பர் வாகனங்கள்..! தொடங்கிவைத்த அமைச்சர்

தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்களிடமிருந்து குப்பைகளைப் பிரித்து பெறும் பணிக்காக இயக்கப்பட உள்ள புதிய 16 டிப்பர் வாகனங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி ஏற்கெனவே ’ஸ்மார்ட் சிட்டி’ ஆக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் பூங்காக்கள், குப்பைகளைப் பிரித்து பெறுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  வீடுகளில் இருந்து பெறப்பட்டு வந்த குப்பைகளை இதுவரை டிரை சைக்கிள்களில் பெற்று வந்த நிலையில், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி 74 டிப்பர் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அதில் முதல்கட்டமாக 16 டிப்பர் வாகனங்கள் மூலம் குப்பைகள்  பெறப்பட உள்ளன. இந்த 16 புதிய டிப்பர் வாகனங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். 

இதுகுறித்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், “தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 90.66 சதுர கி.மீ. மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 3,72.408 ஆகும். மொத்த வார்டுகளில் தினசரி பெறப்படும் குப்பை அளவு 220 மெட்ரிக் டன். 31 வார்டுகள் தனியார் மூலமாகவும், 29 வார்டுகள் மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் மூலமாகவும் துப்புறவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  பெறப்படும் குப்பைகள், 10 கி.மீ தொலைவில் உள்ள 503 ஏக்கர் பரப்புள்ள உரக்கிடங்கில்,  36 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது.

மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரித்து பெறப்படும் குப்பைகளை  16 நுண் உரக்கிடங்குகளில் உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  வார்டுகளில் பெறப்படும் குப்பைகளை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் இயக்கபட உள்ள இந்த புதிய டிப்பர் வாகனங்கள் மூலம் குப்பைகள் பெறப்பட்டு உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் 5 மகளிர் குழு உறுப்பினர் இருப்பார்கள். இவர்கள் குப்பைகளை பெற்று டிரம்களில் போடுவார்கள். மட்கும் குப்பைக்கு 3 டிரம்கள், மட்காத குப்பைக்கு 3 டிரம்கள் என  6 டிரம்கள் வைக்கபட்டிருக்கும். இதில் மைக், ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டிருப்பதால் தொடர்ச்சியான அறிவிப்பின் மூலம் மக்களிடமிருந்து குப்பைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற  முடியும். இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ்., கருவி  பொறுத்தப்பட்டிருப்பதால் வாகனத்தை கண்காணிக்கவும் முடியும். தற்போதுள்ள சுகாதாரப்பணியாளர்கள் வாறுகால் சுத்தம் செய்தல், சாலைகளில் குப்பைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்” என்றார்.       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!