“காலேஜ் பிடிக்கல... அதனால சாகிறேன்” – தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்

கல்லூரி மாணவர் ஒருவர், ''வாழ்க்கை என்ற தண்டவாளத்தை கடக்கத் தெரிந்தவன் வாழ்கிறான், கடக்கத் தெரியாதவன் என்னைப்போல சாகிறான்'' எனத் தன் தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தாமரைச்செல்வன்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள புதுப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தாமரைச்செல்வன், 12-ம் வகுப்பு வரை  விழுப்புரத்தில் படித்தவரை அவரது தந்தை, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் உள்ள நேரு நினைவு கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் படிப்பில் சேர்த்துவிட்டார்.

கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவந்த தாமரைச் செல்வன், நேற்று இரவு அவர் தன் தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு, அவர் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்கான ஹைலேண்ட் விடுதியில் தூக்கு மாட்டி தற்கொலைசெய்துகொண்டார். அவரது பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார், மாணவரின் மரணத்துக்கான காரணம்குறித்து விசாரித்துவருகின்றனர். போலீஸாரின் விசாரணையில், மாணவர் தாமரைச் செல்வன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அந்தக் கடிதத்தில், 'வாழ்க்கை என்ற தண்டவாளத்தை கடக்கத் தெரிந்தவன் வாழ்கிறான், கடகந்த் தெரியாதவன் என்னைப்போல சாகிறான். எங்க அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றுதான், கல்லூரி எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கட்டணம் குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக இந்தக் கல்லூரியில் சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த முதல்நாளே என்னுடைய வணிகவியல்துறை எங்கு என்று கேட்டபோது, கல்லூரிக்கு வெளியேதான் அந்தத் துறையின் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றார்கள். அதில் இருந்தே நான் வெறுத்துவிட்டேன். மேலும், இங்கு இருக்கும் சுற்றுப்புறச் சூழல் சரியாக இல்லை. என்னால் படிக்க முடியவில்லை என்று என்னுடைய அப்பாகிட்ட எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. இதற்கு மேலும் நான் இங்கு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான், எங்க அப்பாவுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என இந்த முடிவை எடுக்கிறேன்” என அந்தக் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவர் தாமரைச் செல்வன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.

மாணவர் தற்கொலை செய்துகொண்ட தகவல், விழுப்புரத்தில் உள்ள தாமரைச் செல்வன் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும், துறையூர் காவல்நிலைய போலீஸார், உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தாமரைச் செல்வனுடன் படிக்கும் மாணவர்களிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

கல்லூரிச் சூழல் சரியில்லை என்ற காரணத்திற்காக, கல்லூரி மாணவர் ஒருவர் உருக்கமாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!