டெண்டரை எடப்பாடியின் உறவினர்கள் எடுத்திருப்பதால்தான் சந்தேகமே..! சீறும் டி.டி.வி.தினகரன்

'1,300 கோடி ரூபாய் டெண்டரை எடப்பாடியின் உறவினர்கள் எடுத்திருப்பதால்தான் சந்தேகம் அதிகரித்திருக்கிறது' என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

விழுப்புரம் பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்கச் செல்லும் வழியில், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “ஒட்டன்சத்திரத்தில் 1,300 கோடி ரூபாய் செலவில் சாலை அமைப்பதற்காக, உலக வங்கியில் கடன் பெறப்பட்டது. அதற்கான டெண்டர் விடப்பட்டு தற்போது பணி ஆணையும் வழங்கப்பட உள்ளது. அதில் ஊழல் நடந்ததாக எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். பொது வாழ்க்கையில் ஈடுபட்டால், நம்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அந்தப் புகாரில் உண்மை இல்லை என்றால், முதல்வர் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அல்லது பொய்க் குற்றச்சாட்டு கூறியவர்கள்மீது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்குப் போட வேண்டும்.

அதைச் செய்யாமல், புகார் கூறியவர்களைத் தேடும் குற்றவாளிகளாக அறிவித்திருப்பது நல்லது அல்ல. இந்தப் பணியை எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள்தான் எடுத்திருக்கின்றனர். அதனால்தான் சந்தேகம் அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி வேண்டாம்  என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சர் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. தமிழகத்தை தற்போது ஆட்சி செய்பவர்கள் அனைத்துக் கட்சியினருடனும் டெல்லி சென்று, பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என  அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை. 

தங்களது ஆட்சியை எப்படியாவது நடத்திச்சென்றுவிட வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கான சரியான பணிகளைச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகால அன்றாட நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவற்றைக் குறிப்பிட்டு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்போம். எனவே, காவல்துறை அதிகாரிகள் சரியாகப் பணியாற்ற வேண்டும். புதுச்சேரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் வந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதேபோல புதுச்சேரி ராஜ்ய சபா உறுப்பினர்  கோகுலகிருஷ்ணனும் என்னிடம் இல்லை” என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!