`காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்’ - முதலமைச்சர், ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசு அனைத்துக்கட்சிக்  கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கான பங்கு குறைவாக அளிக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்  என்று தி.மு.க கோரியது. அரசு சார்பில் இந்த கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை என்று கூறி, கடந்த பிப்ரவரி 22-ல் தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் 21-ம் தேதி அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 22-ம் தேதி நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தை ரத்துசெய்த தி.மு.க., அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை எதிர்ப்போம் என்று கூறியுள்ள கர்நாடக அரசு, இந்த விவகாரம் தொடர்பாக வரும் 7-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். தொலைபேசி வாயிலாக ஸ்டாலினைத் தொடர்புகொண்ட முதலமைச்சர், இந்த ஆலோசனையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடை பெற இருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள், சட்ட வாய்ப்புகள் உள்ளிட்டவைகுறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!