வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (03/03/2018)

கடைசி தொடர்பு:09:20 (03/03/2018)

ராமநாதபுரத்தில், தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளின்மீது பெட்ரோல் குண்டு வீச்சு! அமைச்சருக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை

ராமநாதபுரத்தில், தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளின்மீது பெட்ரோல்குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் மணிகண்டன்தான் இதற்குக் காரணம் என்று கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தினகரன் ஆதரவாளர்கள் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  

ராமநாதபுரத்தில் டி.டி.வி ஆதரவாளர்கள் வீட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு

ராமநாதபுரத்தில், அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு தரப்பினரும் போட்டி போட்டு நடத்தும் பொதுக் கூட்டங்களில், ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்ச்சித்து வருகின்றனர். இதில், அமைச்சராக உள்ளோம் என்பதையும் மறந்து, அமைச்சர் மணிகண்டனே நேரடியாக எதிர்த் தரப்பினரை தரம் தாழ்ந்து பேசுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார். கடந்த 26-ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில், ''அ.தி.மு.க கரை வேட்டி கட்டியிருக்கும் தினகரன் ஆதரவாளர்களின் வேட்டியை உருவுங்கள். அதனால் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்'' என மணிகண்டன் பேசினார். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன் அணியினர் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸார் தலையிட்ட பின்னர், தினகரன் ஆதரவாளர்கள் கலைந்துசென்றனர்.

இந்நிலையில், நேற்று (2.3.2018) நள்ளிரவு  ராமநாதபுரம் கொத்தர் தெருவில் வசித்துவரும் டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த இளைஞர ணிச் செயலாளர் கமல், இலக்கிய அணிச் செயலாளர் தவமுனியசாமி ஆகியோர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. வீட்டின்மீது வீசப்பட்ட பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் அங்கு சிதறிய நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் ஜி.முனியசாமி ஆகியோர் தலைமையில், ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தின் பின்னணியில், அமைச்சர் மணிகண்டன் இருப்பதாகக் கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ராமநாதபுரத்தில் பதற்றம் நிலவிவருகிறது.