`ஜெயலலிதா முகத்தைக்கூட மக்கள் மறந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்!’ - ஜெ.தீபா தாக்கு

ஜெ.தீபா பேரவை சார்பாக, திருப்பூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று இரவு நடைபெற்றது. இதில், ஜெ.தீபா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

ஜெ.தீபா

அப்போது, ``சமீபத்தில் ஒரு நடிகை மரணமடைந்த 24 மணி நேரத்துக்குள், அவர்குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகிவிட்டன. ஆனால், தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் இறந்து ஓராண்டு காலம் கடந்தும், இன்றுவரை ஒரு வெள்ளை அறிக்கைகூட வெளியிடப்படவில்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரின் தலைமையிலான அரசு முழு ஒத்துழைப்பைக் கொடுக்கிறது. ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கழித்து அமைக்கப்பட்ட 'ஆறுமுகசாமி கமிஷனும்' இதுவரை எதையுமே கண்டுபிடிக்கவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

பெண்களுக்கான காவல்நிலையம், தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம் என எத்தனையோ மிகச் சிறந்த திட்டங்களை தமிழகத்துக்கு ஜெயலலிதா கொண்டுவந்திருக்கிறார். ஆனால், அந்தத் திட்டங்கள் அனைத்தும் தற்போது உள்ள அரசினால் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்கவும் யாரும் முன்வரவில்லை. இப்போது
விளம்பரத்துக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் அரசியல் மாறியிருக்கிறது. இத்தகைய சூழலில்தான், எத்தனையோ நடிகர்கள் இன்று அரசியலுக்கு வந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், இங்கு ஆளும் கைக்கூலி அரசோ, மக்கள் வரிப்பணத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது பெயரையும் பதவியையும் மட்டும் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, ஜெயலலிதாவுக்கு இவர்கள் உண்மையாக இருக்கவில்லை. சமீபத்தில், இவர்கள் திறந்துவைத்த சிலையே அதற்கு சாட்சியாகும். ஜெயலலிதாவின் முகத்தைக்கூட மக்கள் மறந்துவிட வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருக்கிறது.

என் அத்தை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.முந்வையும், தமிழக மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் தமிழக மக்கள் என்னை அரசியலுக்கு அழைத்துள்ளனர். மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு பட்டங்கள், பதவிகள் எல்லாம் தேவையில்லை. உங்களுக்காக நான் ஏற்றுக்கொண்ட மக்கள் பணிகளை, என்னால் முடிந்தவரை தொடர்ந்து செய்யவிருக்கிறேன். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதற்காகவே இந்த இயக்கம், விரைவில் அரசியல் கழகமாக மாற்றப்படும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் விட்டுச்சென்ற பணிகளை, அவர்களது வழியிலேயே நின்று நாம் வெற்றிகரமாக நடத்த வேண்டும்'’ என்று பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!