பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி ரயிலுக்கு உற்சாக வரவேற்புகொடுத்த திருவாரூர் மக்கள்!

திருவாரூர்

எல்லா இரவுகளும் இருளை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. சிலநேரம் வெளிச்சத்தையும் அறிமுகப்படுத்துகின்றன. அப்படித்தான் ரயில் நிலையத்தில் திருவாரூரே உறங்காமல் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. புது ரயில் வருகிறது என்றா, இல்லை. பழைய ரயிலே புதிய பாதையில் வரப்போகிறது என்பதற்காகத்தான்.

கடந்த 2010-ம் ஆண்டு, மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. அப்போது, திருவாரூரில் அகல ரயில் பாதைப் பணிகள் நடைபெற்றதால், மன்னை - சென்னை விரைவு ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்பட்டுவந்தது.

மன்னார்குடியிலிருந்து கிளம்பும் வண்டி, தஞ்சாவூர் தாண்டும் வரை 2 முறை ரயில் என்ஜின் மாற்றியாக வேண்டும். இதில், நீடாமங்கலம் ரயில் நிலையமும் தஞ்சாவூர் இரயில் நிலையமும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 67 (NH 67) க்கு குறுக்கே நீடாமங்கலம் ரயில் நிலையம் அமைந்துள்ளதால், கிட்டத்தட்ட 20-லிருந்து 30 நிமிடங்கள் வரை சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மக்கள், காலை மற்றும் இரவு நேரங்களில் பாதிக்கப்பட்டுவந்தனர்.

திருவாரூர் வழித்தடத்தில், அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தும், மாற்று பாதையில் ரயில் இயக்கப்பட்டதால், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பல கட்ட போராட்டம் நடத்திவந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மத்தியப் பல்கலைக்கழகம் என முதன்மையான கல்வி நிலையங்கள், கோயில் தலங்கள் இருந்தும், மாநிலத் தலைநகரம் செல்வதற்கு மக்கள் அனுதினமும் கடினப்பட்டுவந்தனர்.

thiruvarur

இந்நிலையில், மன்னை விரைவு வண்டி மார்ச் 1 முதல் திருவாரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, மார்ச் 1-ம் தேதி முதன்முறையாக திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த மன்னை விரைவு ரயிலுக்கு பொதுமக்கள் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.  திருவாரூர் ரயில் நிலையம் வந்த மன்னை விரைவு வண்டிக்கு, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் உள்ளிட்ட திருவாரூர் பகுதி பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர். இதன்மூலம், பயண தூரம் 18 கிலோ மீட்டர் குறைவதாகவும், பயண நேரமும் கட்டணமும் குறையும் என்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதை சாத்தியப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலுக்கு, பல்வேறு தரப்பினரும் நேரில் நன்றி சொல்லினர். பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பின், ரயில் போக்குவரத்து மக்கள் மத்தியில் ஆதரவுபெற்றிருப்பதும் இந்த உற்சாக வரவேற்புக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!