`கபாலி'யில் `மை ஃபாதர் பாலையா’... `காலா'வில் என்ன புத்தகம்?

தற்போது வெளியாகியுள்ள `காலா' படத்தின் போட்டோக்களில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் இடத்தில், `கே. டானியல் படைப்புகள்' என்ற புத்தகமும் உள்ளது. குறியீடு இல்லாமல் பா.ரஞ்சித் படமா?

காலா

ஒவ்வொரு படத்திலும் குறியீடுகளை வைத்துக் கதை சொல்லும் பா.ரஞ்சித், தன்னுடைய `காலா' படத்திலும் கொண்டு வந்திருக்கிறார். `கபாலி' படத்தின் அறிமுகக் காட்சியில் `மை ஃபாதர் பாலையா' என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் சத்தியநாராயணா, தெலுங்கில் எழுதிய `மா நானயா பாலையா' என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புதான் படத்தில் இடம்பெற்றது. கரீம் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணா, தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும்வகையில், தன் தந்தை பாலையா சந்திந்த வாழ்க்கை, சமூகப் போராட்டங்கள், அதிலிருந்து மீண்டு, தற்போது தன் குடும்பம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்த முறை `கே.டானியல்  படைப்புகள்' புத்தகம்.

`கே டானியல் படைப்புகள்' என்ற புத்தகத்தில், மொத்தம் ஆறு நாவல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் வசித்துக்கொண்டிருக்கும் தலித்களின் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் அவை.

 6 நாவல்கள்:

1) பஞ்சமர்
2) கோவிந்தன்
3) அடிமைகள்
4) கானல்
5) பஞ்ச கோணங்கள்
6) தண்ணீர்

கே. டானியல் படைப்புகள் புத்தகத்தின் அட்டை

கே. டானியல், இலங்கை வடக்கு மாகாணப் பகுதியின் ஆனைக்கோட்டையில் 1929-ம் ஆண்டில் ஒரு தலித் குடும்பத்தில்  பிறந்தவர். இவர், தலித் மக்களின் உரிமைகளுக்காகவே எழுதிவந்தவர். இயக்கம் மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் தலித் மக்களின் உணர்வை வெளிப்படுத்தினார். இவர், தலைமை ஏற்று நடத்திய `தீண்டாமை ஒழிப்பு'ப் போராட்டம், இலங்கையில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியது. அவர் ஈழ தலித் வராலாற்றையே இலக்கியப் படைப்பாக்கினார்.

பஞ்சமர்:

இந்த நாவலில், `தலித்’ மக்களின் கடும் உழைப்பு, தியாக உணர்வு முதலிய நற்குணங்கள் வெளிப்படுகின்றன. 1972-ம் ஆண்டில், டானியல் எழுதிய முதல் நாவல், `பஞ்சமர்'. உயர் சாதியினரை எதிர்த்துப் போராடும் வகையில் கதைக்களத்தை அமைத்திருக்கிறார் டானியல். தலித்துகளின் வாழ்க்கையை யதார்த்தத்தோடும் போராட்டப் பண்போடும் இந்த நாவல் சித்திரிக்கிறது.

கானல்:
பரம்பரை பரம்பரையாக சைவ மதத்தையே தழுவிவந்த ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர், இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினர். அதன்மூலம், தங்கள் அவல வாழ்வை விடுவிக்க முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட பலாபலன்களைச் சித்திரிப்பதுதான் இந்த நாவல்.

அடிநிலை மக்கள் வாழ்க்கையையும் பிரச்னைகளையும் எழுத்தில் வழங்கும் முயற்சியில் தமிழ் மக்களிடையே அடக்குமுறையின் வடிவமாக இருக்கும் சாதிப் பிரச்னைகளைப் பற்றி எழுதியுள்ளார். தமிழில் தலித்திய எழுத்துகளின் முன்னோடி எனக் கூறத்தக்கவர், ஈழ எழுத்தாளர் கே. டானியல். ஈழத்துத் தீண்டாமைக் கொடுமைகளைத் தனது யதார்த்த எழுத்துகள் அனைத்துக்கும்  கருப்பொருளாக எடுத்துக்கொண்டவர்.  தலித் போராட்டங்களுக்கு  இன்றுள்ள அங்கீகாரமெல்லாம் இல்லாத ஒரு காலகட்டத்தில் தலித் நாவல்களைப் படைத்தவர். சமூக அமைப்பு முறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் வரை சீர்கேடுகள் மனித இனத்தைச் சூழ்ந்துகொண்டேயிருக்கும். அந்த வகையில் டானியல் நாவலில் சாதி மறுப்பு, ஆதிக்க எதிர்ப்பு, மனிதநேயம் ஆகியவை அழுத்தமாகப் பேசப்பட்டன. வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை அடைவதற்கான முயற்சிகளின் ஆயுதங்களில் ஒன்றாக இலக்கியம் இருக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்தப் புதினம் படைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!