`வழக்கமான பரிசோதனைக்காகவே பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார்!’ - அப்போலோ மருத்துவமனை விளக்கம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பினராயி விஜயன்

இன்று அதிகாலை 2.20 மணிக்கு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததாகவும் அதன் காரணமாக சென்னை கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது 72 வயதான பினராயி விஜயன், நேற்று கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்றார். கடந்த 22-ம் தேதி கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞரின் வீட்டுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று பினராயி விஜயன் ஆறுதல் கூறினார். பின்னர், அங்கு பல்வேறு ஆய்வுகளும் நடத்தினார். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக வட்டாரங்களில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், `` தோழர் பினராயி விஜயன் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகள்தான் இவை. அவருக்குத்  தெரிந்த மருத்துவர்கள் சிலர் சென்னை அப்போலோவில் பணிபுரிகிறார்கள். அதனாலேயே அவர் அப்போலோ மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு எந்த உடல்நிலைக் குறைபாடும் இல்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், `கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோதனைகள் முடிந்து அவர் நாளை (4.3.2018) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!