`காவிரிப் படுகையில் மீண்டும் 13 மணல் குவாரிகள்’ - திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவிரிப் படுகையில், 13 மணல் குவாரிகள் அமைக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார், கலெக்டர் ராசாமணி. இது, சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மணல் குவாரி

ஆறுகளில் மணல் எடுப்பது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தடையை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இதையடுத்து, மணல் குவாரிகளைத் திறக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம்காட்டிவருகிறது. இந்நிலையில், மணல் குவாரிகள் திறப்பது தொடர்பாகப் பேசிய திருச்சி கலெக்டர் ராசாமணி, “திருச்சி மாவட்டத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி மணல்குவாரிகள் திறக்கப்படும். மாவட்டத்தில் ஏற்கெனவே 13 மணல் குவாரிகள் இயங்கிவந்தன. மீண்டும் அதே 13 மணல் குவாரிகளும் மிக விரைவில் திறக்க பொதுப்பணித்துறைமூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குவாரி, முழுமையாக அரசுப் பணிகளுக்காகச் செயல்படும் வகையில் இயங்கும். செயற்கை மணல் குவாரிகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தால், அதற்குரிய ஆய்வுகளைச் செய்து, உரிய பரிசீலனைக்குப் பிறகு, முறையாக அனுமதி வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் இப்போதைய நிலவரப்படி, குடிநீர்த் தட்டுப்பாடு இல்லை. சிறு கிராமங்களில் குடிநீர் விநியோகப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடியால், ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவட்டம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதுகுறித்து துறைரீதியாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. தட்டுப்பாடு அபாயம் இருந்தால், மார்ச் 4-ம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தெரிவித்து, அரசிடமிருந்து நிதி பெற்று, தீர்வு காணப்படும் என்றார். திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மீண்டும் மணல் குவாரிகள் அமைக்க உள்ளதால், காவிரி கபளீகரமாகும் என்கிற கவலையில் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!