காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் ஆலோசனை! | Leader of opposition MK Stalin meets CM Edappadi palanisamy in Chennai over Cauvery verdict

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (03/03/2018)

கடைசி தொடர்பு:11:36 (03/03/2018)

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் ஆலோசனை!

ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவிரி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவை குறைத்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாாலின், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் கூறிய கருத்துகளை முதல்வர், துணை முதல்வர் கேட்டறிந்தனர். முடிவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பில் பிரதமர் மோடியைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனிடையே, ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது, நடந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இது குறித்து பிரதமர் அப்போது எதுவும் பேசவில்லை.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் எங்களுக்கு இரு கண்கள் போன்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகத் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கைவிரித்தார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று திடீரென மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் சென்றார். அவருடன் துரைமுருகனும் சென்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா வரும் 7-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.