வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (03/03/2018)

`ஆராயிக்கு நீதி வேண்டும்’ - தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த பெண்கள்!

விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தைத் தாக்கி,சிறுவனைக் கொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த ஊர் பெண்கள் உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆராயி. கடந்த 21-ம் தேதி இரவு, தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள், மூன்று பேரையும் கொடூரமாகத் தாக்கியதோடு, 10 வயது சிறுவன் சமயனைக் கொலைசெய்தனர். அதேபோல, சிறுமி தனத்தையும் பாலியல் வன்கொடுமை செய்தனர். ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவருக்கும் இந்தத் தாக்குதலால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதில், சிறுமி தனம் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறது காவல்துறை.

இந்த விவகாரம் தொடர்பாக, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் வெள்ளம்புத்தூர் மக்கள் நேற்று அனுமதிகேட்டனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி மறுத்த நிலையில், 5 நாள் அடையாள உண்ணாவிரத்திற்கு அனுமதி கேட்டிருக்கின்றனர். ஆனால், அதற்கும் அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது காவல்துறை. அதனால். ``ஆராயி மற்றும் அவரது மகள் தனத்தைத் தாக்கியதோடு, சிறுவன் சமயனையும் கொலைசெய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் வெள்ளம்புத்தூர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால், இந்த ஊர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியிருக்கின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க