வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:14:59 (03/03/2018)

பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன மாணவனின் உயிர்! - நிர்வாகி, தலைமையாசிரியரைத் தேடும் போலீஸ்

கழிவுநீர் தொட்டி

 சென்னையில் உள்ள தனியார் பள்ளியின்  அலட்சியத்தால், எல்.கே.ஜி மாணவன் பலியானதையடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். கவனக்குறைவாக இருந்ததாக பிளம்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 சென்னை போரூரை அடுத்த அயப்பன்தாங்கலில், தனியார் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், அப்பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் கிருதீஸ்வரன், எல்.கே.ஜி படித்துவந்தார். அவர், கழிவறைக்குச் செல்லும்போது அங்குள்ள கழிவுநீர்த் தொட்டியில் தவறிவிழுந்துவிட்டார்.  அதைப் பார்த்த சகமாணவர்கள், அலறியடித்துக்கொண்டு ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக கிருதீஸ்வரனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல், கிருதீஸ்வரனின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவரது உறவினர்கள்  பள்ளியை முற்றுகையிட்டனர். 

பள்ளி மாணவன்

இதையடுத்து, உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான போலீஸார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்துசென்றனர். சம்பவம்குறித்து பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய வந்த ஊழியர்கள் ஆகியோர்மீது போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில், கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்யவந்த தரணிகுமாரை போலீஸார் கைதுசெய்தனர். தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் எல்.கே.ஜி மாணவன் கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்து இறந்துள்ளார். பள்ளி நிர்வாகி மற்றும் ஆசிரியர்களான  சாந்தி, புனிதவதி, சுமதி மற்றும் பிளம்பர் பாலாஜி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடிவருகிறோம். கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்தவர்கள் ,கழிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுள்ளனர். அந்தச் சமயத்தில்தான் மாணவன் கிருதீஸ்வரன் அதில் தவறிவிழுந்துள்ளார்.  பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மாணவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.