திரிபுராவில் இனி மோடி `சர்க்கார்'... வீழ்ந்தார் ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

ந்தியாவின் ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார் பதவியை இழந்தார். திரிபுராவில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. 

திரிபுராவில் சி.பி.எம். தோல்வி

திரிபுராவில் 1998-ம் ஆண்டு முதல்  தொடர்ந்து முதல்வர் பதவி வகித்தவர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார், நடந்து முடிந்த தேர்தலில் தன்பூர் தொகுதியில் போட்டியிட்டார். மனுத்தாக்கலின்போது, இருப்பாக ரூ.2,410 வங்கியிலும் கையில் ரூ.1,520  இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மாணிக் சர்க்கார் வகிக்கும் முதல்வர் பதவிக்காக மாதம் ரூ.26,315 சம்பளமாகக் கிடைக்கும், அதை கட்சிக்குக் கொடுத்துவிடுவார். பதிலுக்கு கட்சி அவருக்கு வாழ்வாதாரத்திற்காக  ரூ.9,700 வழங்கும். மாணிக் சர்க்காரின் மனைவி பதஞ்சலி, அரசு ஊழியர் ஆவார்.

1998- ம் ஆண்டு முதல் மாநில முதல்வராக இருந்தவருக்கு சொந்த வீடு, கார் எதுவும் கிடையாது. வருமான வரியும் கட்டியது இல்லை. இப்படியும் ஒரு முதல்வர் இந்தியாவில் இருக்கிறாரா என்ற ஆச்சர்யமடைந்த பலரும் தற்போது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  திரிபுரா தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக முதல்வர் பதவியை இழந்தார் மாணிக் சர்க்கார்.

மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 வேண்டும். பாரதிய ஜனதா கட்சி 41 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கடந்த தேர்தலில் ஒரு  தொகுதியில்கூட பாரதிய ஜனதா இங்கு வெற்றி பெறவில்லை. இப்போதோ தடாலடியாக ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 18 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. தன்பூர் தொகுதியில் மாணிக் சர்க்கார் முன்னணியில் உள்ளார்.

''மாணிக் சர்க்கார் கை சுத்தமாக இருந்து என்ன பயன்?. அவரின் சகாக்கள் ஊழலில் திளைத்தனரே. 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இங்கு ஆட்சி நடத்தியது. ஆனால், பின்தங்கிய மாநிலமாகத்தானே திரிபுரா இருக்கிறது’’ என்று பாரதிய ஜனதா கட்சியின் திரிபுரா தேர்தல் பொறுப்பாளர் சுனில் தியோகர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!