`தமிழர்களைப் பிரதமர் மோடி கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்!' - தமிமுன் அன்சாரி தாக்கு

தமிழர்களைப் பிரதமர் மோடி கிள்ளுக் கீரையாக எண்ணுவதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.

தமிமுன் அன்சாரி


தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிமுன் அன்சாரி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "காவிரி விவகாரத்திற்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்திருப்பதை வரவேற்கிறோம். இது ஆரோக்கியமான அரசியல் போக்காகும். சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவரும், அமைச்சர் ஜெயக்குமாரும் இருவேறு கருத்துகளைக் கூறினாலும் அதில் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது, பிரதமர் மோடி இதுதொடர்பாக தமிழக தலைவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்பது உறுதியாகிறது.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இப்போது 2 வாரம் முடிந்துவிட்டது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதுவும் ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் சந்திக்க நேரம் ஒதுக்காதது தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவமதிக்கும் செயலாகும். பிரதமர் தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் எனத் தெரிகிறது.

கர்நாடகாவின் தேர்தல் வெற்றிதான் முக்கியமென பிரதமர் நினைக்கிறார். தமிழகத் தலைவர்களுடனான சந்திப்பைப் பிரதமர் மோடி, தொடர்ந்து தாமதித்தால் ஜனநாயகப் போராட்டங்களில் தமிழர்கள் குதிப்பார்கள். வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் சமரசமின்றி செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், உழவர் அமைப்புகளும் ஒரே உணர்வோடுதான் இருக்கிறார்கள். அதை டெல்லிக்கு உணர்த்த வேண்டும். மனிதநேய ஜனநாயகக் கட்சி காவிரி உரிமைக்காகத் தொடர்ந்து ஜனநாயக வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபடும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!